ஜஸ்ட் 6 பேர் தான்.. ஆனால் 40,000 ஓட்டாமே.. ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரஸ் போட்ட பலேபிளான்! ஆஹா
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டுக்களை குறிவைத்து காங்கிரஸ் கட்சி மெகாதிட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி தற்போது காங்கிரஸ் கட்சி கூடுதலாக 6 நட்சத்திர பேச்சாளர்களை நியமனம் செய்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் முதலில் 34 பேரின் பெயர்களுடன் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 6 பேரின் பெயர்கள் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள 40 ஆயிரம் ஓட்டுக்களை குறிவைத்தே இர்கள் 6 பேரையும் புதிதாக காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்த தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.

திமுகவுக்கு முக்கிய தேர்தல்
இதனால் இந்த இடைத்தேர்தல் என்பது காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஆளும் திமுக அரசுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக கருதப்படும். இதனால் தொகுதியில் களமிறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. இதனை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் 11 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார். இவர்கள் ஈரோடு கிழக்கில் வீடு , வீடாக சென்று தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள்
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் வியூகம் வகுக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வற்காக காங்கிரஸ் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ்அழகிரி, தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், மேலிட இணை பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத், எம்பிக்கள் செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், விஜயதாரணி உள்பட 34 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

கூடுதலாக 6 பேர் நியமனம்
இதன் தொடர்ச்சியாக 6 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டது. இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ்அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 6 பேர் சேர்க்கப்படுகிறார்கள். அதன்படி ஜேஎம்எச் அசன் மவுலானா எம்எல்ஏ, எஸ்எம் இதாயத்துல்லா, ஜெ அஸ்லம் பாஷா, எஸ்கே நவாஸ், பெரம்பூர் ஜி நிசார், அ அமீர்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
இந்நிலையில் தான் கூடுதலாக 6 நட்சத்திர பேச்சாளர்களை காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளதன் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது நட்சத்திர பேச்சாளர்களாக இணைக்கப்பட்ட அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தமட்டில் இஸ்லாமியர்களின் ஓட்டு என்பது வெற்றியை தீர்மானிக்கும் வகையில் உள்ளது. அதாவது சுமார் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை அப்படியே அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களான 6 பேரை நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் பட்டியலில் யாரும் இல்லை
முன்னதாக 34 பேருடன் வெளியிடப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இஸ்லாமியர்கள் யாரும் இடம்பெறாத நிலையில் அது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில் தான் தற்போது 6 பேரின் பெயர்களும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications