ஏணி வைத்து சுவர் ஏறி, ஒரே ஜம்ப்.. அடேங்கப்பா சுமதி செஞ்ச வேலையை பார்த்தீங்களா.. அதிர்ந்த அந்தியூர்
ஈரோடு : ஆளை பார்த்தாலே அப்பாவி போல் இருக்கிறாரே, இவர் பெயர் சுமதி. இவர் செய்த வேலையை கேட்டால் மிரண்டு போயிடுவீங்க.. அந்தியூரைச் சேர்ந்த சுமதி, ஏணியை போட்டு, சுவர் ஏறி அடுத்த வீட்டுக்குள் குதித்து, அங்கு நகை, பணம் திருடியிருக்கிறாராம். அதிகாலையில் கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த 40 வயதாகும் பூபதி , அந்த பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பூபதியின் மனைவி ஷாலினி. இவர்களுடைய மகன் ஆதிக். பூபதியின் தாயார் ரத்தினம் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும் வீட்டின் முன்பக்க கதவை அடைத்து விட்டு தூங்கியிருக்கிறார்கள். அதிகமாக புழுக்கம் இருந்ததால் காற்றுக்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் கதவை பூபதி திறந்துவைத்து தூங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிகாலை 4.30 மணி அளவில் ரத்தினமும், அவரது மகன் பூபதியும் எழுந்து பார்த்தபோது, வீட்டின் மற்றொரு அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்திருக்கிறது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தது கண்டு மொத்த குடும்பமும் பதறிப்போனார்கள். மேலும் அந்த அறையில் மறைவாக ஒரு இடத்தில் பெண் ஒருவர் ஒளிந்து கொண்டிருந்ததை பார்த்த பூபதி, உள்ளே இருப்பது யார் என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார்.
பூபதியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் உதவியுடன், அந்த பெண்ணை பிடித்து அந்தியூர் போலீசில் பூபதி ஒப்படைத்தார். பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், பூபதியின் வீட்டில் சிக்கிய பெண் அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமி மனைவி சுமதி (40) என்பது தெரிய வந்தது. இவர் திங்கள்கிழமை அதிகாலை பூபதி வீட்டின் வழியாக சென்று உள்ளார். அப்போது பூபதியின் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் ஏணி இருந்ததை சுமதி பார்த்துள்ளார். உடனே அவர் அந்த ஏணியை எடுத்து பூபதி வீட்டின் சுற்றுச்சுவரில் வைத்து ஏறி, குதித்தாராம்.
பின்னர் நைசாக வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்து அங்கு வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சேலையில் மறைத்து வைத்துக்கொண்டு வெளியே தப்பி விடலாம் என்று முயன்றாராம். இதனை கண்ட வீட்டு உரிமையாளர்களிடம் வசமாக சிக்கி கொண்டாராம். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தார்கள். ஏணி வைத்து சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications