நீங்க பழைய விஜயகாந்த்தை பார்க்கணுமா? ‘பல்ஸ்’ பிடித்து பேசும் பிரேமலதா.. திரும்பிப் பார்க்கும் திமுக!
தேமுதிகவுக்கு வெற்றியைக் கொடுத்தால் பழைய விஜயகாந்த்தாக உங்கள் முன் வந்து நிற்பார் என பிரேமலதா பேசியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றால் விஜய்காந்த்திற்கு தைரியம் வரும். என் மக்கள் என்னை கைவிடவில்லை, என் மக்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்ற தெம்பும் தைரியமும் விஜய்காந்த்திற்கு வந்து அதை அவர் உணர்ந்தால் பழைய விஜயகாந்த்தை நீங்கள் பார்ப்பீர்கள் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நேற்று ஈரோடு பி.பி.அக்ரஹாரம், கள்ளு பிள்ளையார் கோவில் வீதி, திருநகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விஜயகாந்த்
கட்சி தொடங்கியதுமே 2006 தேர்தலில் மாநிலம் முழுவதும் ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை உருவாக்கியது தேமுதிக. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதன்பிறகு, ஒரு தேர்தலில் கூட எம்.எல்.ஏ, எம்.பியை பெற முடியாமல் தடுமாறி வருகிறது அக்கட்சி. விஜயகாந்த்தின் உடல்நலக் குறைவால், மக்கள் தேமுதிக மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். இனி தேமுதிகவுக்கு ஆதரவளிப்பது வீண் என்ற நிலைக்கு பலரும் வந்துவிட்டனர். இந்நிலையில் தான், இந்த இடைத்தேர்தலில் தேமுதிக வென்றால், விஜயகாந்த் மீண்டும் பழையபடி வருவார் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்,

துணை ராணுவம் எதற்கு இங்கே?
பிரச்சாரத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி பணத்தையும், பொருளையும் வாரி வழங்குகிறார்கள். அதனை தேர்தல் அதிகாரிகளோ, இங்கு வந்துள்ள துணை ராணுவப் படையோ ஒருவரை கூட பிடிக்கவில்லை. பல இடங்களில் மக்களை ஆட்டுமந்தையை அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். ஒரு இடத்திற்கு கூட துணை ராணுவம் செல்லவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் துணை ராணுவப் படையினர் நிற்கிறார்கள். இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்?

சும்மா வேடிக்கை பார்க்கவா?
துணை ராணுவப் படை எதற்கு தமிழ் நாட்டுக்கு வரவேண்டும்? இவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாது. இந்த தொகுதியை பற்றியும் தெரியாது. தமிழ் பேசவும் தெரியாது. இங்குள்ள மக்களை பற்றியும் ஒன்றும் தெரியாது. தொப்பியை மாட்டிக்கொண்டு, வரும் வண்டிகளை பார்ப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து அவர்களை ஏன் இங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.

தெம்பு கொடுக்கும்
விஜயகாந்த் நலமாக இருக்கிறாரா என்று நீங்கள் அனைவரும் கேட்கிறீர்கள். அவர் நலமாக உள்ளார். மீண்டும் பழைய விஜயகாந்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வெற்றி அவருக்கு 100 ஆண்டுகள் தெம்பை கொடுக்கும். என் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்றுதான் கேப்டன் தனது மனதில் நினைக்கிறார்.

பழைய விஜயகாந்த்தாக
வறுமை கோட்டுக்கு கீழே யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்துkகொண்டு இருக்கிறார். இந்த தொகுதியில் நீங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுத்தால் பழைய விஜயகாந்தாக அவர் உங்கள் முன் வந்து நிற்பார். இந்த தொகுதியில் விஜயகாந்த் நேரடியாக போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் அனைவரும் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

தாத்தா ஆனவர்கள்
தாத்தாவான இந்நாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் மீசை வைத்த ஆம்பளையா, வேட்டி கட்டின ஆம்பளையா எனப் பேசுவது தேவையா? திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி பொறுப்பில் இருந்த நிலையில் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் தற்போது ஒருவர் ஒருவர் வசைபாடி வருகின்றனர். மின் கட்டணம் ராக்கெட் வேகத்தில் ஏறியுள்ளது. தேர்தலின் போது திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்காக என்றும், எப்போதும் நான் சகோதரியாக துணை நிற்பேன். தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பை தர வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை இல்லை
தமிழ்நாட்டு அமைச்சர்கள் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் 21 அமைச்சர்கள் இடைத்தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே இங்கு முகாமிட்டுள்ளனர் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களின் ஏழ்மையையும், வறுமையையும் பயன்படுத்தும் திமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications