சிதம்பரம் பேருந்து நிலையத்தில் டமார் என வெடித்த அரசு பேருந்து டயர்.. குபுகுபுன்னு எரிந்த பயங்கர தீ!
சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு டயர் பேருந்து வெடித்த போது திடீரென தீ பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

வடகிழக்கு பருவமழை வெளுத்தெடுத்ததால் பாதிக்கப்பட்ட இடங்களில் கடலூர், சிதம்பரமும் அடக்கம். அதே சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லக் கூடிய பேருந்து புறப்பட காத்திருந்தது. கும்பகோணம் கோட்டம் சீர்காழி அரசு பேருந்து இது.
அப்போது திடீரென பேருந்தின் டயர் வெடித்த சப்தம் கேட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர். அதனைத் தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
டீசல் டேங்க் வெடித்து கரும்புகையுடன் தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டபடியே அலறி அடித்து ஓடினர். சிதறிய ஓடி பொதுமக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இத்தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications