கோழி ரத்தத்தால் பூஜை.. எலுமிச்சையால் திருஷ்டி கழிப்பு.. பள்ளத்தில் முதியவர் சடலம்.. நரபலியா?
ஓசூர்: ஓசூர் அருகே புதையல் எடுப்பதாக கூறி முதியவர் ஒருவர் ஒன்றரை அடி ஆழ குழியில் உட்கார வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் நரபலி கொடுக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவரது மனைவி லட்சுமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது இரு மகன்களான நாகராஜ் (24), சிவக்குமார் (22) ஆகியோருடன் புதூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
இவரது இரு மகன்களும் நேற்று முன் தினம் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வரவில்லை. இதனால் லட்சுமணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை லட்சுமணன் மகன் சிவக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டில் இல்லை
அப்போது தனது தந்தை லட்சுமணன் வீட்டில் இல்லை. இதனால் இவர்களுக்கு சொந்மான வெற்றிலை தோட்டத்தில் இருக்கிறாரா என போய் பார்த்தார். அங்கு சிவகுமார் தனது தந்தையின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடியில் குழி தோண்டப்பட்டிருந்தது.

இறந்த நிலையில் முதியவர்
அதில் லட்சுமணன் இறந்த நிலையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார். அங்கு எலுமிச்சம் பழம் அறுக்கப்பட்டு கோழிகளும் அறுத்து பூஜை செய்தது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் உடனே கெலமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

பூஜை நடந்தது
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வருகை தந்தனர். அங்கு பூஜைகள் நடந்திருப்பது போன்று இருந்ததால் போலீஸார் ஏதேனும் புதையல் எடுப்பதாக பூஜை நடந்ததா என விசாரித்தனர். மேலும் லட்சுமணனின் உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அவர் எப்படி இறந்தார் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது.

கொலையா
அவரை யாரேனும் கொலை செய்தார்களா, இல்லை அவர் தானாகவே உயிரிழந்தாரா என்பது குறித்து கெலமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை யாரேனும் நரபலி கொடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை துரிதமடைந்துள்ளது.

முதியவர் நரபலியா
லட்சுமணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். அண்மைக்காலமாக புதையல் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அது போல் இறந்தால் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கையிலும் பலர் தங்கள் சொந்த குழந்தைகளையே நரபலி கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications