தினமும் குடித்துவிட்டு வரும் தந்தை.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன சிறுவன்.. செம்ம ட்விஸ்ட்
ஹைதராபாத்: குடிப்பழக்கம் உள்ள தன் தந்தை தினமும் தன் அம்மாவை துன்புறுத்துவதாக சிறுவன் ஒருவன் ஆந்திராவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளான். சிறுவனின் புகாரை அடுத்து அவரது தந்தையை நேரில் அழைத்து கண்டித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
குடிப்பழக்கம் பல குடும்பங்களை நாசம் செய்து வருகிறது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் தன்னுடையை உடல் நலத்தை கெடுத்து, தன்னை நம்பி உள்ளவர்களையும் தவிக்க விட்டுவிடுகிறார்கள். அத்துடன் வேலைக்கும் சரிவர செல்லாமல் குடிப்பதற்காகவே வேலைக்கு செல்லும் நிலைக்கு ஒரு கட்டத்தில் மாறுகிறார்கள். அப்படி மாறிவிடுவதால் இன்று பல இளைஞர்கள் வேலைக்கு போகாமல் குடிக்கு அடிமையாகி சுற்றும் நிலை காணப்படுகிறது.

சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு , நாமக்கல், கரூர், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற தொழில் நகரங்களில் குடிப்பதற்காகவே வேலைக்கு செல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். முன்பெல்லாம் இரவில் மட்டும் குடித்தவர்கள், இப்போது மூன்று நேரமும் குடிக்கும் அளவிற்கு மாறி விட்டார்கள்.
குடிநோய் காரணமாக வேலைக்கு செல்லும் இடங்களில் உற்பத்தியும் சரியாக நடப்பது இல்லை. குடிப்பழக்கம் உடல் நலம், குடும்பம், நாட்டின் உற்பத்தி திறன் மூன்றையுமே கடுமையாக பாதிக்கிறது.
சரி ஆதங்கத்தை சொல்லி ஒன்றும் மாறப்போவது இல்லை. விஷயத்துக்கு வருவோம். குடிப்பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலத்திலுமே சமூக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் பாபட்லா பகுதியில் தனது தந்தை தினமும் மது அருந்திவிட்டு வந்து தாயை துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் 9 வயது சிறுவன் ரஹிம் புகார் அளித்தான். இதையடுத்து போலீசார், சிறுவனின் தந்தை சுபாணியை நேரில் வரவழைத்து, கண்டித்த பின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் சிறுவனை பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் தந்தையின் குடிப்பழக்கம் சிறுவனின் மனதில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் பலர் தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications