"ரயிலில் ஒரு தேவதை".. பெண்ணுக்கு ஏற்பட்ட வலி! சட்டென பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி! திக் நிமிடங்கள்
ஹைதராபாத்: ரயிலில் வந்த மருத்துவ மாணவி ஒருவர் சக பயணிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் மக்கள் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
செகந்திராபாத் துரந்தோ ரயில் விசாகப்பட்டினம் நோக்கி இன்று சென்று கொண்டு இருந்தது. அந்த ரயிலில் 28 வயது ஆன கர்ப்பிணி ஒருவர் பயணித்துக்கொண்டு இருந்தார்.
அவர் நிறைமாத கர்ப்பிணி என்று கூறப்படுகிறது. அம்மாவின் வீட்டிற்கு இவர் ரயிலில் சென்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

கர்ப்பிணி
அதே கோச்சில் 23 வயது நிரம்பிய கே சுவாதி ரெட்டி என்ற மாணவி பயணம் செய்து கொண்டு இருந்தார். அவர் மருத்துவ கல்லூரி மாணவி ஆவார். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. வலியில் அந்த பெண் துடித்துள்ளார். அவருக்கு பிரசவம் ஏற்பட டாக்டர் வேறு ஒரு தேதி கொடுத்து இருந்ததால் அப்போது அவருக்கு வலி ஏற்படும் என்று தெரியவில்லை. வலியில் அவர் கத்தியது அந்த கோச் முழுக்க கேட்டுள்ளது.

மாணவி
அதே கோச்சில் வேறு இடத்தில் இருந்த அந்த மாணவி சத்தத்தை கேட்டுவிட்டு வந்து விசாரித்து உள்ளார். அதன்பின் அந்த பெண்ணை பார்த்த மாணவி சுவாதிக்கு, இவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்று தெரிந்து உள்ளது. உடனே ஆண்கள் எல்லோரும் வெளியேறுங்கள். அவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்று கூறி உள்ளார். முதலில் சுவாதி பார்க்க சிறிய பெண் போல இருப்பதால், அந்த கர்ப்பிணியின் உறவினர்கள், அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி தரவில்லை.

என்ன நடந்தது?
அதன்பின் சுவாதி.. நான் மருத்துவம் படிக்கிறேன். நான் பைனல் இயர் மாணவி. எனக்கு பிரசவம் பார்க்க தெரியும் என்று கூறியுள்ளார். அந்த ரயிலில் வேறு மருத்துவர்கள் இல்லை. அவசரத்தில் ரயிலை நிறுத்தினாலும், நடு காட்டில் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது இயலாத காரியம். இதனால் அந்த மாணவியை பிரசவம் பார்க்கட்டும் என்றும் ஒப்புக்கொண்டு உள்ளனர். அந்த மாணவியும் துணிச்சலாக தான் படித்ததை வைத்து பிரசவம் பார்த்து உள்ளார்.

துணி
அங்கே இருந்த பெண்கள் சுற்றி நின்று துணியால் மறைத்த நிலையில், அந்த பிரசவம் நடந்து உள்ளது. அங்கு இருந்த பெண்கள் பலர் தாங்கள் வைத்து இருந்த துண்டுகளை கொடுத்து உதவி செய்துள்ளனர். இதையடுத்து அந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அந்த பெண்ணும் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். குழந்தை பெற்ற பின் இரண்டு பேருமே முழு ஆரோக்கியதோடு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, 5.35 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது.

பேட்டி
இது தொடர்பாக அந்த மாணவி அளித்த பேட்டியில், எனக்கு பதற்றமாக இருந்தது. அதேபோல் நான் பார்த்த முதல் பிரசவம் இது என்பதால் பயமாக இருந்தது. அதே சமயம் எனக்கு இதில் பயிற்சி இருக்கிறது. ஏற்கனவே மருத்துவமனையில் எங்கள் டாக்டர்களுக்கு நான் பிரசவம் பார்க்க துணையாக இருந்துள்ளேன். இதனால் நான் நம்பிக்கையாக இருந்தேன். குழந்தை முன் கூட்டியே பிறந்ததால் பிரசவத்தில் கொஞ்சம் சிக்கல் இருந்தது. அதன்பின் குழந்தை வெளியே வந்ததும்தான் நிம்மதியாக இருந்தேன், என்று அந்த பெண் கூறியுள்ளார். ரயிலில் அந்த மாணவி தேவதை போல வந்து பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றி உள்ளதாக மக்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications