தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்..127 கி.மீ. தூரத்தில் நில அதிர்வு.. குலுங்கிய வீடுகள்.. மக்கள் பீதி
ஹைதராபாத்: தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:43 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. வாரங்கலுக்கு கிழக்கே சுமார் 127 கி.மீ தொலைவில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது லேசான அளவில் பதிவாகியுள்ளது என்பதால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் இந்த நிலநடுக்கத்தால் சற்று பீதியடைந்துள்ளனர்.

பொதுவாக நிலநடுக்கம் என்பது எப்போதுமே முன்கூட்டி கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மீட்பு பணியில் ஈடுபடுகிறோம். எனவே இதனை முன்கூட்டியே கணிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். அதேபோல நிலநடுக்கம் ஏற்படும் போது பாதுகாத்துக்கொள்ளும் செயல்முறை குறித்தும் அரசு அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதாவது நிலநடுக்கம் உணரப்பட்டால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இப்படி வெளியேற தாமதமானால் வீட்டின் உள் இருக்கும் கட்டில், டேபிள் என ஏதாவது ஒன்றின் கீழ் ஒளிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படி ஒளிந்துகொள்ளும்போது ஜன்னல் மற்றும் கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது முக்கியம். ஏனெனில் வீடுகள் சரியும் போது ஜன்னல் கம்பிகள் நமக்கே ஆபத்தாக மாறிவிடும். அதேபோல அப்பார்ட்மென்ட் போன்றவற்றில் குடியிருப்பவர்கள் அவசரமாக வெளியேற முயன்ற கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வார்கள். இதுவும் உயிரை பறித்துவிடும்.

கார், பைக் போன்றவற்றில் பயணம் செய்துகொண்டிருந்தாலும் உடனடியாக அதை நிறுத்திவிட வேண்டும் என்றும் பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். மிகவும் முக்கியமாக செல்ல பிராணிகளை கையில் தூக்கிக்கொண்டு ஓடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவைகள் மனிதர்களை விட வேகமாகவும், சாதூர்யமாகவும் தப்பித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications