ரூ. 58,000 கோடி சொத்து! பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இந்திய விஞ்ஞானி? யார் இவர்?
ஹைதராபாத்: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மருத்துவ விஞ்ஞானி ஒருவர் இடம்பெற்றுள்ள செய்தி பலரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. மேலும், இவர் பரம்பரை பணக்காரர் இல்லை என்பதும் அவரது சொந்த முயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார் என்பதும் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
இந்தியாவின் பணக்காரர் யார் என்றால், உடனடியாக பலர் முகேஷ் அம்பானி என்பார்கள். அல்லது சிலர் இன்னும் கொஞ்சம் அப்டேட் ஆக இருந்தால் அதானி என்பார்கள். காந்தி காலத்து ஆட்களாக இருந்தால், டாடா அல்லது பிர்லாவை சொல்வார்கள். இந்தப் பணக்காரர்கள் அனைவரும் வடமாநிலங்களை மையமாகக் கொண்டு இருப்பவர்கள். அதாவது டெல்லி அல்லது மும்பைதான் மில்லினியர்களின் விருப்பமான மெட்ரோபாலிட்டன் சிட்டியாக உள்ளது. ஆனால், இந்த நகரங்கள் எல்லாம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே பணக்காரர்களின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது.

இந்த ரெக்கார்ட்டுகளை எல்லாம் உடைத்துத் தள்ளிவிட்டு நம் தென்னிந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட ரூ. 58,000 கோடி சொத்து மதிப்புள்ள ஒரு மிகப்பெரிய பணக்காரர் உருவாகி இருக்கிறார். அதுவும் நமது பக்கத்து மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் தான் இந்த மிகப் பெரிய பணக்காரர் வலம் வருகிறார். எத்தனை நாளைக்குத்தான் வடநாட்டுப் பணக்காரர்கள் பற்றிய சாம்ராஜ்ய கதைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்போம். இதோ இருக்கின்ற ஹைதராபாத் பணக்காரர் பற்றியும் அவசியம் அறிந்து கொள்வோம்.
2024 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் சுமார் 200 பில்லியனர்கள் உள்ளனர். நாட்டிலேயே பணக்காரர் யார் என்றால் முகேஷ் அம்பானிதான். இந்தப் பட்டியல் இவருடன் முடிந்து போய்விடவில்லை. அதில் ஹைதராபாத் பணக்காரரும் இடம்பெற்றுள்ளார்.
யார் இந்த ஹைதராபாத் பணக்காரர்?
Hurun Global Rich List 2024 இன் படி, 7 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 58,395 கோடி) அளவு சொத்து மதிப்பு கொண்ட இந்த ஹைதராபாத்தில் பணக்காரரின் பெயர் டாக்டர் முரளி கே. திவி. இவர் ஒன்றும் பரம்பரை பணக்காரர் இல்லை. இவரே தனது உழைப்பைக் கொட்டி உருவாக்கிய நிறுவனம் இவரை இந்தளவுக்கு உச்சத்திற்குக் கொண்டு போய் உள்ளது. Divi's Laboratories என்ற கம்பெனியில் நிறுவனர் மற்றும் மேனேஜிங் டைரக்டர் இவர்தான். இது ஒரு multinational pharmaceutical company. அதாவது மருந்து தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம்
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி, அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவ விஞ்ஞானி இவர். 2023 முதல் 2024 வரை மட்டுமே இவரது சொத்து 40% உயர்ந்துள்ளது. அதாவது கொரோனா அலை எல்லாம் முடிவுக்கு வந்த பிறகு. இந்த பில்லியனர் தொழிலதிபரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, நிறுவனத்தைப் பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. Forbes இன் கூற்றுப்படி, டாக்டர் டிவி'ஸ் லேப் உலக அளவில் மருந்துப் பொருட்களைச் சிறந்த முறையில் சப்ளை செய்து வரும் நிறுவனமாகும்.
அதே நேரத்தில் இது ஊட்டச்சத்து மருந்துகளையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானமான சுமார் 965 மில்லியன் டாலர். அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 8,049 கோடி. இந்த வருமானத்தில் 90% ஏற்றுமதியிலிருந்து கிடைக்கிறது.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களின் பட்டியலில், டாக்டர் முரளி திவி 33வது இடத்திலிருந்தார். இவர் கோடீஸ்வர தொழில்முனைவோர் மட்டுமல்ல; உலகின் உள்ள பணக்கார விஞ்ஞானிகளில் ஒருவர். இவரது பிள்ளைகளாக டாக்டர் கிரண் எஸ். திவி, நிலிமா பிரசாத் திவி ஆகிய இருவரும் அப்பாவுடன் சேர்ந்து இந்த மருத்துவ தொழிலை நிர்வகித்து வருகின்றனர். டாக்டர் கிரண் தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் இயக்குநராக இருக்கிறார். நீலிமா இயக்குநராகவே உள்ளார்.
1990 ஆம் ஆண்டில் திவியின் ஆய்வகங்களை நிறுவுவதற்கு முன்பு, டாக்டர் முரளி திவி, உலகளவில் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் தயாரிப்பு குழுக்களுக்குத் தலைமை தாங்கி வந்தார். இந்தியாவில் தனது படிப்பை முடித்த பிறகு டாக்டர் முரளி திவி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கே ஒரு மருந்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே இந்தியா திரும்பினார். 1984 இல் ஆறு ஆண்டுகள் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸில் பணியாற்றினார். அவர் இறுதியில் 2003 இல் Divi's Laboratories ஐ நிறுவினார்.
டாக்டர் முரளி திவி இன்றைய தெலுங்கானாவில் உள்ள காகதியா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்தப் புகழ்பெற்ற விஞ்ஞானி அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் இன்ஜினியர்ஸ் மற்றும் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications