பாஜக கொடுத்த ஆஃபர்.. பிஆர்எஸ் கட்சியை எங்களுடன் இணைத்து விடுங்கள்.. கேசிஆர் மகள் கவிதா ஷாக்
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க ஆஃபர் வழங்கப்பட்டதாக அவரது மகள் கவிதா பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

தெலுங்கானாவில் பாஜக மேலிடம் கட்சியை வளர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிஆர்எஸ் கட்சியும் தெலுங்கானாவில் தனது பலத்தை காட்ட துடித்து வருகிறது. பிஆர்எஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் (கேசிஆர்) உள்ளார். செயல் தலைவராக கேடி ராமராவ் (கேடிஆர்) செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கேசிஆர் மகள் கவிதா ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது சகோதரரான கேடிஆரின் பெயரை கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேசிஆர் மகள் கவிதா அளித்த பேட்டியில், ‛‛எனக்கு ஒரு தலைவர் தான் உள்ளார். அது கேசிஆர். நான் அவரது தலைமையின் கீழ் தான் செயல்படுவேன். நான் சிறையில் இருந்தபோது பிஆர்எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பிஆர்எஸ் ஒரு பிராந்தியக் கட்சி. அதேபோல் தெலுங்கானா மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பிஆர்எஸ் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இதனால் பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க முடியாது என்று உறுதியாக சொன்னேன்'' என்றார்.
கவிதா டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அதே வழக்கில் சிபிஐ கைது செய்தது. 5 மாதம் வரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் தான் இந்த ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிஆர்எஸ் கட்சியை பாஜக இணைக்க முயன்றுள்ளது உறுதியாகி உள்ளது.இதையடுத்து பிஆர்எஸ் இப்போது பலவீனமாக உள்ளது என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கவிதா, ‛‛பிஆர்எஸ்கட்சி பலவீனமாக இல்லை. பிஆர்எஸ் பலவீனமடைந்தால் பாஜக ஆதாயமடையும் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் அல்லது பாஜகவாக இருந்தாலும், பிஆர்எஸ்ஸை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.
மேலும் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடிஆருடன் இணைந்து பணியாற்ற தயாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கவிதா, ‛‛ எனது ஒரே தலைவர் கேசிஆர்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் சகோதரர் கேடிஆர் உடன் கவிதாவுக்கு பிரச்சனை இருப்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது.தற்போது கவிதா தற்போது பிஆர்எஸ் கட்சியின் மகளிர் அணி தலைவராக உள்ளார். அதேபோல் எம்எல்சியாக (தெலுங்கானா மேல்சபை) பொறுப்பு வகித்து வருகிறார்.
தந்தை கேசிஆர் பிஆர்எஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.அவரது மகனும்,கவிதாவின் சகோதரருமான கேடிஆர் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ளார். கட்சியில் கவிதா ஓரம்கட்டப்படுவதாக கவிதா நினைக்கிறார். கேடிஆர் - கவிதா இடையே கட்சியில் அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் கவிதா இந்த தகவலை தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
முன்னதாக கடந்த மே 2ம் தேதி கேசிஆருக்கு, கவிதா கடிதம் எழுதினார்.அந்த கடிதம் சமீபத்தில் வெளியே வந்தது. அந்த கடிதத்தில் சகோதரர் கேடிஆரை அவர் விமர்சனம் செய்திருந்தார். அவர் பாஜகவை எதிர்ப்பது இல்லை. பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவை எதிர்த்து தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இப்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ஆனால் அவர் பாஜகவை எதிர்ப்பது இல்லை'' என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications