திருப்பதி லட்டு பிரியர்களை அதிரவைத்த சந்திரபாபு நாயுடு.. விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக புகார்
ஹைதராபாத்: முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அமராவதி மங்களகிரியில் நேற்று (செப்டம்பர் 18) மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன் மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் வெட்கப்பட வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் மோகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இப்படி குற்றச்சாட்டு வைத்த சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
"சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தி பெரும் பாவம் செய்துள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்கள் உண்மையிலேயே கேவலமானவை. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை, இப்படிக் குற்றஞ்சாட்டுவதில்லை.
சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்கவும் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் நானும் எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடுவும் தனது குடும்பத்தினருடன் சத்தியம் செய்யத் தயாரா?" என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பியும், திருமலை தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார்.
திருமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் குறித்து சர்ச்சை எழுப்பப்படுவது இது முதல் முறையல்ல. தெலுங்கு தேசம் கட்சி கடந்த காலங்களில், திருப்பதி லட்டு தரம் பற்றி கூறப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications