கொரோனாவால் இறந்ததாக புதைக்கப்பட்ட பெண்... 16ம் நாள் காரியத்திற்கு பின்.. உயிருடன் வந்த அதிசயம்
ஹைதராபாத்: ஆந்திராவின் விஜயவாடா மருத்துவமனையில் கொரோனாவால் இறந்துபோன மனைவியின் (70வயது) உடலை மே 15 ஆம் தேதி முத்யால கடய்யா புதைத்தார். சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 1 ஆம் தேதி குடும்பத்தினர் அவருக்காக காரியமும் செய்துவிட்டனர்..
அடுத்த நாள், குடும்பத்தினருக்கும் கிராமத்துக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முத்யால கடய்யாவின் மனைவி வீடு திரும்பினார். இந்த வினோதமான சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜாகையப்பேட்டை மண்டலத்தின் கிறிஸ்டியன் பேட் கிராமத்தில் வசிப்பவர் முத்யால கடய்யா. இவரது மனைவி கிரிஜம்மா. கடந்த மே 12 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக விஜயவாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காணவில்லை
முத்யால கடய்யா தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவி கிரிஜம்மாவை சந்திப்பார். இந்நிலையில் மே 15 அன்று கிரிஜம்மாவை கோவிட் வார்டில் காணவில்லை. இதனால் அவர் மனைவியை மற்ற வார்டுகளிலும் தேடி பார்த்தார், ஆனால் கிரிஜம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் அங்குள்ள செவிலியர்கள் கிரிஜம்மா இறந்திருப்பார் என்று கூறியுள்ளனர்.

புதைக்கப்பட்டார்
அத்துடன் மருத்துவமனை சவக்கிடங்கில், வயதான ஒரு பெண்ணின் முழுமையாக பேக்கிங் செய்து மூடப்பட்ட உடலை உங்கள் மனைவியின் உடல் என்று கூறி முத்யாலா கடய்யாவின் ஊழியர்கள் ஒப்படைத்தார்கள். மனம் உடைந்த கடய்யா, மனைவியின் உடலை தனது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்று அதே நாளில் இறுதி சடங்குகளைச் செய்து புதைத்தார்.

காரியம் செய்தார்
சில நாட்களுக்குப் பிறகு, மே 23 அன்று, அவர்களது 35 வயது மகன் முத்யாலா ரமேஷும் கம்மம் மாவட்ட மருத்துவமனையில் கோவிட்டுக்கு பலியானார் என்ற செய்தி குடும்பத்திற்கு கிடைத்தது. இதனால் உருகுலைந்து போன முத்யாலா குடும்பம் ஜூன் 1 ம் தேதி கிரிஜம்மா மற்றும் ரமேஷ் இருவருக்கும் சடங்குகளையும் இறந்தவர்களுக்கு செய்யும் காரியத்தையும் செய்தது.

கிராம மக்கள் அதிர்ச்சி
அடுத்த நாள் கிரிஜம்மா ஊர் திரும்பியுள்ளார். குணமடைந்த பிறகு தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்று கிரிஜம்மா சோகமாகவும் ஏமாற்றத்துடனும் வந்துள்ளார். மருத்துவமனை வீடு திரும்புவதற்கு ₹ 3,000 வழங்கியிருக்கிறது. அதை வைத்து ஊர் திரும்பி உள்ளார். குடும்பத்தினரும், ஊரில் உள்ளவர்களும் கிரிஜம்மா உயிருடன் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோவிட் நோய்த்தொற்றுக்கு அஞ்சி, கிராமத்தினரும், குடும்பத்தினரும் புதைக்கும் முன் உடலின் முகத்தை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜயவாடா மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த அலட்சியம் குறித்தும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications