தெலுங்கானாவில் பாரத் ஜோடா யாத்திரை: தலைப்பாகை அணிந்து.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய ராகுல்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி அங்கு பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய உடை அணிந்து அவர்களுடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வடநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் நடைபயணம்
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களை சந்தித்து வந்தார். அதனை தொடர்ந்து கர்நாடகாவில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ராகுல் காந்தியின் கர்நாடக நடைபயணம் முக்கியத்துவம் பெற்றது. இதில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தியும் சிறிது தூரம் நடைபயணத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு உற்சாகம் அளித்தார்.

தெலுங்கானாவில் ராகுல் காந்தி
இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. மழை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ராகுல் காந்தி நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். இவ்வாறாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை கடந்த 27 ஆம் தேதி 50-வது நாளை எட்டியது.

உற்சாகத்துடன் ராகுல் காந்தி
இன்று 52-வது நாளாக ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் தர்மபூர் பகுதியில் ராகுல் காந்தி நடைபயணமாக சென்றார். ராகுல் காந்தியுடன் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் பலரும் கலந்து நடந்து சென்றனர். அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து உற்சாகத்துடன் ராகுல் காந்தி யாத்திரை சென்றார்.

பழங்குடியின மக்களுடன் நடனம்
தனது பாதயாத்திரைக்கு இடையே பழங்குடியின மக்களுடன் இணைந்து 'கொம்மு கோயா' என்ற பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தையும் ஆடினார். பழங்குடியின மக்களின் பாரம்பரியப்படி தலைப்பாகை அணிந்துகொண்டிருந்த ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து ஆடினார். இதைப்பார்த்த அங்கிருந்த கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இசைக்கருவிகளை வாசித்த ராகுல்
முன்னதாக ராகுல் காந்தி நாரயண்பேட் மாவட்டத்தில் பாதயாத்திரை சென்ற போது உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து இசைக்கருவியையும் இசைத்து மகிழ்ந்தார். பழங்குடியின மக்களுடன் இணைந்து ராகுல் காந்தி ஆடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ராய்பூரில் நடைபெற்ற பழங்குடியின நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராகுல் காந்தி நடனம் ஆடி இருந்தார்.












Click it and Unblock the Notifications