சொந்த சீட்ல தோத்துட்டு! ஸ்டாலின் ஆட்சியை அண்ணாமலை கலைப்பாரா? தெலுங்கானா சட்டசபையில் கலாய்த்த கேசிஆர்
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவ் கிண்டல் செய்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல தமிழ்நாட்டிலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
உத்தவ் தாக்கரே எதையும் கட்டுப்படுத்தாமல், கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். இப்போது அவர்களின் உள்துறை மந்திரி தேஷ்முக் சிறையில் இருக்கிறார். தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக் சிறையில் இருக்கிறார். இது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள். இரண்டரை ஆண்டுகள் கழித்து அங்கு ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவை எதிர்த்து சிவசேனா - பாஜக ஆட்சியை அமைத்து இருக்கிறார்.
இது ராஜ தர்மம். அதே ராஜ தர்மம் தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். இதைத்தான் கேசிஆர் தற்போது விமர்சனம் செய்துள்ளார்.

கேசிஆர்
பாஜகவை தேசிய அளவில் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் தீவிரமாக இவர் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திரசேகர் ராவ் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. அதோடு தேசிய கட்சியை விரைவில் தொடங்க போவதாகவும் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டு இருந்தார். 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க இவர் முயன்று கொண்டு இருக்கிறார்.

விமர்சனம் அண்ணாமலை
இந்த நிலையில்தான் சமீபத்தில் கேசிஆரை விமர்சனம் செய்த அண்ணாமலை, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிற்கு ஏற்பட்ட நிலைமைதான் தெலுங்கானாவில் கேசிஆருக்கு ஏற்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். மேலும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல தமிழ்நாட்டிலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டிற்கு எப்போது நடக்கிறது என்று பார்ப்போம். பாருங்க இன்னும் ஒரு மாதம்தான். எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்லை. நிறைய பேர் இருக்கிறார்கள். திமுகவில் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராக இருக்கிறார். உதயநிதியை அமைச்சராக்கினால் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார். சிவசேனா வேறு - திமுக வேறு என்று இவர்கள் கூறுவார்கள், ஆனால் இல்லை என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அண்ணாமலை கேசிஆர்
இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு தற்போது தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போவதாக பாஜக கூறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கூட ஏக்நாத் ஷிண்டே வர போவதாக அண்ணாமலை சொல்கிறார். அவரால் அவரின் சொந்த தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலைதான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாககூறுகிறார் .

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே வகை அரசியல்தான் உங்களின் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா? சொல்லுங்கள். தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏக்களை வைத்து இருக்கிறோம், நட்பான கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எங்கள் அரசை கவிழ்ப்போம் என்றும் அண்ணாமலை கூறுகிறார். இதுதான் உங்களின் நீங்கள் அரசியல் நடத்தும் விதமா? என்று கே சந்திர சேகர ராவ் கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications