திடீரென முதல்வர் வீட்டை சுற்றிய காவி படை.. மொத்தமாக இறங்கிய பாஜக மகளிர் அணி.. ஹைதராபாத்தில் பரபரப்பு
ஹைதராபாத்: தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தோல்வி அடைந்தது. மகளிர் மசோதாவுக்கு ஆதரவு தரத் தவறிவிட்டதாகச் சொல்லி காங்கிரஸை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தெலுங்கானாவில் நிலைமை மோசமாக மாறியது. குறிப்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இல்லம் இன்று ஒரு போர்க்களமாகவே மாறியது.
மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. வியாழக்கிழமை இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது. இருப்பினும், மசோதா நிறைவேறத் தேவையான 3ல் இரு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்தது.

பாஜக போராட்டம்
இதை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ள பாஜக, மசோதாவை ஆதரிக்காத எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாகத் தெலுங்கானாவில் இது தொடர்பான போராட்டங்கள் நடந்தது. அங்கு மாநிலத்தில் ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் உள்ள நிலையில், முற்றுகைப் போராட்டத்தை பாஜக அறிவித்தது..
பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் ஷில்பா ரெட்டி தலைமையில், நூற்றுக்கணக்கான பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை திடீரென முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அடுத்தடுத்து வந்த குழுக்களாகத் திரண்டு வந்த பெண்கள், போலீஸாரின் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால் அங்குப் பெரும் பதற்றம் நிலவியது.
முதல்வர் இல்லத்தில் பரபரப்பு
முதல்வர் வீட்டை நோக்கிப் பாய்ந்த போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, ஷில்பா ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைப் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர். பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பிறகே நிலைமை ஓரளவுக்குச் சீரானது.
வீட்டுச் சிறை
முன்னதாக இந்தப் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்க, தெலங்கானா மாநில பாஜக தலைவர் என்.ராமச்சந்திர ராவ் இன்று அதிகாலையிலேயே ஹைதராபாத் போலீஸாரால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரது வீட்டின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவர் போராட்ட களத்திற்கு வருவதைத் தடுக்கவே ஹைதராபாத் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்தனர். இருப்பினும், போலீஸாரின் இந்த நடவடிக்கையை "ஜனநாயக விரோதம்" என்று ராமச்சந்திர ராவ் கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கக் காங்கிரஸ் தவறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. "பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை முட்டுக்கட்டை போட்டுத் தடுத்த காங்கிரஸ் கட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுவோம்" என்பதே பாஜகவின் தற்போதைய முழக்கமாக இருக்கிறது. இருப்பினும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறும் காங்கிரஸ், அத்தோடு இட ஒதுக்கீடு மசோதாவையும் பாஜக இணைத்துள்ளதே பிரச்சனை என விமர்சித்துள்ளது.
உருவ பொம்மை எரிப்பு
முன்னதாக தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது தொடர்பாக பாஜக எம்பி தேஜஸ்வி பேசியதும் சர்ச்சையாக வெடித்தது. அவர் தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை ஏதோ இந்தியா பாகிஸ்தான் பிரிவினை போலப் பேசியிருந்தார். இதற்குத் தெலுங்கானாவில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. தேஜஸ்வியுடன் உருவ பொம்மையையும் எரித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.














Click it and Unblock the Notifications