பாலியல் வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது! போக்சோ வழக்கில் இரவோடு இரவாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
ஹைதராபாத்: தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலியல் வழக்கில், மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பாகீரத் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மே 29ம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் பின்னணி மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முக்கியமான பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார். 54 வயதாகும் சஞ்சய் குமார் கரிம்நகர் பகுதியில் இருந்து எம்பியாக இருக்கிறார். மோடி அமைச்சரவையில் இவர் உள் துறை இணை அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே இவரது மகன் குறித்த பாலியல் வழக்கு தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மத்திய அமைச்சர்
மைனர் மாணவி ஒருவரை அவரது மகன் பலாத்காரம் செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய்யின் மகன் பண்டி பாகீரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் மறுத்த அடுத்த நாளே, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சட்டம் தன் கடமையைச் செய்யும் எனத் தந்தை ஒருபுறம் பேசினாலும், கோர்ட் மற்றும் போலீஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் அனலைக் கிளப்பியுள்ளது.
பாகீரத்துக்கு எதிராக சைபராபாத் போலீஸார் 'லுக்அவுட்' நோட்டீஸ் வெளியிட்டு இருந்தனற்.. அதன்படி கரீம்நகர், டெல்லி அவர் நடமாடக்கூடிய அனைத்து இடங்களுக்கும் தனிப்படைகள் விரைந்தன. ஹைதராபாத் போலீஸ் அகாடமி அருகே பாகீரத் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உடனடியாக வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
வழக்கறிஞர் சொல்வது என்ன
நர்சிங்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட மஞ்சிரேவுலா பகுதியில் வைத்துச் சிறப்பு அதிரடிப் படை அவரை அதிரடியாகக் கைது செய்து, பெட்பஷீராபாத் காவல் நிலையத்திற்கு மாற்றியது. மறுபுறம், அவரது வழக்கறிஞர் கருணாசாகர், "சட்டத்திற்கு மதிப்பளித்து, இரவு 8:15 மணியளவில் டெக் பார்க் அருகே பாகீரத்தை போலீசாரிடம் முறைப்படி சரணடைந்தார். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மே 8-ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாகீரத் அந்தச் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது. மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, வழக்கின் தீவிரம் கருதி இன்னும் கடுமையான போக்சோ பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன.
மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், "சத்யமேவ ஜெயதே! சட்டத்தின் முன்னால் எனது மகனும் ஒரு சாமானியனும் ஒன்றுதான். என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும், விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதில் புகார்
இந்த விவகாரத்தில் பாகீரத் தரப்பிலும் ஒரு எதிர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் மிரட்டி ₹50,000 வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொய் புகார் அளிக்காமல் இருக்க தன்னிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் பாகீரத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரும் மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவருமான பண்டி சஞ்சய் மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications