ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்திற்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே இதற்கான வேட்பாளர்களை கட்சி அறிவித்து வருகிறது. எற்கெனவே 150 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல 20 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் மீதமுள்ள தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது நரசாபுரம் லோக்சபா தொகுதியில் கே.பி.ஆர்.நாயுடு, ராஜம்பேட்டை லோக்சபா தொகுதியில் எஸ்.கே.பஷீட், சித்தூர் லோக்சபா தொகுதியில் ஜகபதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மீதம் இரண்டு தொகுதிகள் இருக்கினற்ன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவை வேட்பாளர்களை பொறுத்த அளவில், 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்பட வேண்டும். இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தமுறை ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸில் இணைந்துள்ளதால் ஆந்திர மாநில களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கும், ராஜசேகர ரெட்டிக்கு இருந்த செல்வாக்கையும் மீட்டெடுக்க காங்கிரஸ் முனைந்து வருகிறது.
மறுபுறம் பாஜக மற்றும் பவன் கல்யாணுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு முயன்று வருகிறார். ஆந்திராவின் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் சந்திரபாபு நாயுடு இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடுவது என்று தீவிரமாக திட்டமிட்டிருக்கிறார். இதற்கு பாஜகவும், பவன் கல்யாணும் உதவுவார்கள் என்று நம்பியுள்ளார்.
இருப்பினும் இவர்களுக்கு டஃப் கொடுக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தையின் பாணி அரசியலை கையில் எடுத்திருக்கிறார். ஆந்திராவுக்கு ஜெகன் ஏன் தேவை என்கிற கோஷத்தை முன்வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்டு வருகிறார். தன்னுடைய கடந்த கால ஆட்சி, தந்தை வழி அரசியல் ஆகியவை தனக்கு கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார்.
இதற்கிடையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications