தெலுங்கானாவை வாரி சுருட்டும் காங்கிரஸ்.. BRS காலி.. பாஜகவுக்கும் அதிர்ச்சி.. லோக் போல் முடிவுகள்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை லோக் போல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சார பணியாற்றி வருகின்றன.

கருத்துக்கணிப்பு முடிவுகள்: இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் தெலுங்கானா மாநிலத்தில் லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2019 லோக்சபா தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 சீட்களில், 9 இடங்களை சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ் கட்சி கைப்பற்றியது. 4 இடங்களில் பாஜகவும், 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. அசாதுதீன் ஓவைசியின் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் மொத்தமா அள்ளுதாம்: இந்நிலையில், லோக் போல் நடத்திய கருத்துக்கணிப்பின்படி இந்த முறை காங்கிரஸ் கட்சி, தெலுங்கானாவில் 13 - 15 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் கட்சி 0 - 1 இடங்களையும், பாஜக 2 - 3 இடங்களையும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கேஸ் சிலிண்டர் ரூ. 500 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பது தெலுங்கானா மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பி.ஆர்.எஸ் காலி: மேலும், தெலுங்கானாவின் கிராமப்புற பகுதிகளில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் லோக் போல் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.எஸ் கட்சியின் வாக்கு வங்கி மொத்தமாக காங்கிரஸ் பக்கம் திரும்பி உள்ளதாகவும், இதன் காரணமாக, பி.ஆர்.எஸ் கட்சி தெலுங்கானாவில் ஒரு லோக்சபா எம்.பி சீட்டை கூட பிடிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் லோக் போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications