ஹைதராபாத்தை புரட்டிப்போட்ட கனமழை.. இரவில் திறந்த அணையால் வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்.. மக்கள் அவதி
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் நள்ளிரவில் திடீரென்று ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் முசி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் கரையோர மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். மேலும் சாலைகளை கடந்து வெள்ளம் பாய்ந்ததால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஹைதராபாத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தின் ஓல்டு நகர் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹிமாயத் சாகர் அணை திறந்தது தான். கனமழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று நள்ளிரவில் அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தண்ணீர் முசி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளமாக சூழ்ந்தது.
சடர்காட் மேம்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் அதன் மேல் செல்லும் சாலையில் பொங்கி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த மேம்பாலம், சாலை மூடப்பட்டது. வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இந்த வெள்ளம் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
ரங்கரெட்டி மாவட்டம் மீர்பட் கார்ப்பரேஷன் எல்லலைக்குட்பட்ட மிதிலா நகர் காலனியில் வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பாதுகாப்பு கருதி 1000க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கனமழையின் காரணமாக புதிதாக கட்டப்பட்டு வந்த மூசராம்பாக் மேம்பாலம் இடிந்தது. மகாத்மா காந்தி பஸ் நிலையத்துக்குள் நள்ளிரவில் வெள்ளம் நுழைந்தது. இதனால் பஸ்சுக்கா காத்திருந்த மக்களும் அவதிக்குள்ளாகினர். உடனடியாக அவர்களுக்கு மாற்று இடத்தில் இருந்து பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அதேபோல் தாலபக்தா, லலிதாபாக், உப்புகூடா, சத்ரினகா, பிபேல் பக், அல் ஜூபெயில் காலனி, அப்சல் சாகர், மாலிபள்ளி, பஹததுர்பூரா உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல் அல்வால், மல்காஜ்கிரி, கஜூலாராமராம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பல இடங்களில் நேற்று இரவில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் அவதிக்குள்ளாகினர்.
இந்த மழையின் காரணமாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை அளவு, அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்டவை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications