மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்
ஹைதராபாத்: ஒரு பெண் தனது பிறந்தவீட்டு வழியில் (பெற்றோர்/தாத்தா பாட்டி) பெற்ற சொத்து, அவருக்கு குழந்தை இல்லாமல் அவர் இறந்துபோனால், அந்தச் சொத்து அவர் கணவருக்குப் போகாது; மீண்டும் அந்தப் பெண்ணின் பிறந்தவீட்டு வாரிசுகளுக்கே போகும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு என்ன.. அதன் தீர்ப்பு என்ன என்பதை தெளிவாக பார்ப்போம்.
இந்து திருமண சட்டப்படி சொத்துரிமைப் பிரச்சனைகளில் சில சிக்கல்களுக்கு பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது. அப்படி விடை தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் விடையளித்துள்ளது. விஷயத்திற்கு வருவோம். ஒரு பாட்டிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். பாட்டி தன்னிடம் இருந்த ஒரு சொத்தை 2002-ஆம் ஆண்டு தனது முதல் பேத்திக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதாவது தானப்பத்திரம் செய்து கொடுத்தார். இதனால் முதல் பேத்தியின் பெயரில் வருவாய்த் துறை ஆவணங்கள் ஆந்திராவில் மாற்றப்பட்டன. சொத்தைப் பெற்றுக்கொண்ட சில காலத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை.

இதனிடையே பாட்டி தான் கொடுத்த தானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, அந்தச் சொத்தை தனது இரண்டாவது பேத்திக்கு (மனுதாரர்) உயில் மூலம் எழுதி வைத்தார். இதனிடையே பாட்டி 2012-இல் மறைந்த பிறகு, இரண்டாவது பேத்தி அந்தச் சொத்தை தன் பெயருக்கு மாற்றக் கோரி விண்ணப்பித்தார். வருவாய்த் துறை அதிகாரி அதற்குச் சம்மதித்து உத்தரவிட்டார். ஆனால், மறைந்த முதல் பேத்தியின் கணவர் ( எதிர்மனுதாரர்) இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
தானமாக வழங்கப்பட்ட சொத்தை பாட்டி ரத்து செய்தது செல்லாது என்றும், தனது மனைவிக்குச் சொந்தமான அந்தச் சொத்து தனக்கே சேர வேண்டும் என்றும் கணவர் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட இணை ஆட்சியர், கணவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரண்டாவது பேத்தி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தார்லா ராஜசேகர் ராவ் முன்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவது பேத்தி தரப்பு வாதிடுகையில், இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15(2)(a)-இன் படி, ஒரு பெண் தனது பெற்றோரிடமிருந்து (அல்லது முன்னோர்களிடமிருந்து) பெற்ற சொத்து, அவருக்குக் குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே செல்லும். எனவே, கணவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை. மேலும், சிவில் நீதிமன்றமும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது என்று வாதிட்டார்
எதிர்மனுதாரர் தரப்பு (முதல் பேத்தியின் கணவர்): ஒருமுறை தானமாக வழங்கப்பட்ட சொத்தை பாட்டி ரத்து செய்தது சட்டப்படி செல்லாது. மனைவிக்கு வந்த சொத்து என்பதால் அது கணவருக்குத்தான் சேர வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ராஜசேகர் ராவ் தனது தீர்ப்பில் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் விதிகளை மிகத் தெளிவாக விளக்கினார்.
சட்டப் பிரிவு 15(2)(a)வின் படி, ஒரு இந்துப் பெண் தனது தந்தை அல்லது தாயிடமிருந்து வாரிசுரிமை அடிப்படையில் பெற்ற சொத்து, அவருக்கு வாரிசுகள் (குழந்தைகள்) இல்லாத நிலையில் அவர் இறந்துவிட்டால், அது அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே திரும்பச் செல்லும். இச்சட்டப்படி, பெற்றோரிடமிருந்து வந்த சொத்தில் கணவருக்கோ அல்லது கணவரின் வாரிசுகளுக்கோ எந்தப் பங்கும் கிடையாது. அந்தச் சொத்தின் மீது கணவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லாதபோது, பாட்டி செய்த தானப் பத்திர ரத்து நடவடிக்கையை அவர் கேள்வி கேட்க முடியாது. இணை ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அந்தச் சொத்தை இரண்டாவது பேத்தியின் (மனுதாரர்) பெயருக்கு மாற்றம் செய்யும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
இன்னும் தெளிவாக சுருக்கமாக கூறுவது என்றால், ஒரு பெண் தனது பிறந்தவீட்டு வழியில் (பெற்றோர்/தாத்தா பாட்டி) பெற்ற சொத்து, அவருக்கு குழந்தை இல்லாமல் அவர் இறந்துபோனால், அந்தச் சொத்து அவர் கணவருக்குப் போகாது; மீண்டும் அந்தப் பெண்ணின் பிறந்தவீட்டு வாரிசுகளுக்கே போகும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பளித்துள்ளது












Click it and Unblock the Notifications