மொத்தமாக கோட்டை விட்ட பாஜக! திடீரென இறங்கி அடித்த காங்கிரஸ்! தெலுங்கானாவில் தலைகீழ் மாற்றம்! எப்படி
ஹைதாராபத்: "அரசியலில் ஒரு வாரம் என்பது மிகப் பெரிய காலம்" என்பார்கள்.. இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இப்போது தெலுங்கானா அரசியல் மாறி இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இந்த வாரியே உதாரணம். இந்த வரிக்குக் கடந்த காலங்களில் நடந்த பல சம்பவங்களை நாம் உதாரணமாகச் சொல்லலாம்.

தெலுங்கானாவில் நடக்கும் மற்றொரு சம்பமும் இதற்கு பக்காவான உதாரணமாக மாறியுள்ளது. அங்குக் குறுகிய காலத்தில் அரசியல் தலைகீழாக மாறி இருக்கிறது. அது குறித்து நாம் இதில் விரிவாகப் பார்க்கலாம்.
தெலுங்கானா: கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் பாஜகவால் தெலுங்கானாவில் 119 இடங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும், அதன் பிறகு மொத்தமாக அங்கே கியரை மாற்றிய பாஜக, அடுத்தாண்டு நடந்த 2019 லோக்சபா தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 17இல் 4 இடங்களைக் கைப்பற்றியது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட பாண்டி சஞ்சய் குமார் எம்பி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்திற்குப் பிறகு பாஜக தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்தது.. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் நடந்த இரு முக்கிய இடைத்தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியையே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து. தொடர்ந்து 2022 இடைத்தேர்தலிலும் கூட மிகவும் நெருக்கமாக வந்தே தோல்வி அடைந்தது. ஹைதராபாத் மாநகராட்சியிலும் அவர்கள் பலம் 4இல் இருந்து 49ஆக உயர்ந்தது.
பாஜக: கட்சியை மேலும் வலுப்படுத்த மாநில தலைவர் பாண்டி சஞ்சய் குமார் பாதயாத்திரையும் நடத்தினார். இதனால் அங்கே பாஜக மின்னல் வேகத்தில் வளர்ந்தது. இந்த பாத யாத்திரையால் கிடைத்த வெற்றி பிரதமர் மோடி காதுகளுக்கும் சென்றன. இதைக் கண்டு வியந்த பிரதமர் மோடி, மற்ற மாநில தலைவர்களையும் கூட பாத யாத்திரை செல்லச் சொன்னார். அந்தளவுக்கு இதன் வெற்றி இருந்தது. பாஜகவின் சில நடவடிக்கைகள் ஆளும் பிஆர்எஸ் கட்சியைக் கூட சிக்கலில் தள்ளியது.
மேலும், இந்த பாஜகவின் எழுச்சி காங்கிரஸ் கட்சிக்கும் தலைவலியானது. 2018 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வென்ற 18 பேரில் 12 பேர் தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஆர்எஸ் கட்சிக்குத் தாவினர். 2019 மக்களவைத் தேர்தலில் 3 இடங்களில் வென்றாலும் அதன் பிறகு காங்கிரஸுக்கு மிகப் பெரிய சரிவு காத்திருந்தது. இடைத்தேர்தல்களில் வரிசையாகத் தோல்விகளைச் சந்தித்தது.
காங்கிரஸ்: குறிப்பாக 2018இல் தான் வென்ற முனுகோட் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. பாஜகவுக்கு எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு தகவல் உலா வரத் தொடங்கியது, அதாவது. பாண்டி சஞ்சய் குமாருக்கு பதிலாகத் தெலுங்கானா மாநிலத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படுவார் என்ற செய்தி உலா வரத் தொடங்கியது. மாற்றுக் கட்சிகளில் இருந்த வந்த மூத்த தலைவர்களுக்கு சஞ்சய் குமார் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக் கூறப்பட்டது.
அவர்கள் அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவிடம் வரிசையாகப் புகார்களை அளித்தனர். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து திட்டமிட்டிருந்த பாத யாத்திரைகளும் நடக்காமல் போனது. இந்த குழப்பங்களால் தெலுங்கானாவில் பாஜகவுக்குக் கிடைத்த வளர்ச்சி அப்படியே காணாமல் போனது. மறுபுறம் மூத்த தலைவர்களிடம் இருந்து அழுத்தம் அதிகரிக்கவே சில மாதங்களுக்கு முன்பு சஞ்சய் குமார் நீக்கப்பட்டு மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
கம்பேக்: உட்கட்சி பிரச்சினைகளால் பாஜக திண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம் காங்கிரஸ் சத்தமின்றி சீனுக்குள் வந்தது. கடந்த மே மாதம் கர்நாடகாவில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த நேரத்தில் தான் கேசிஆர் தனது கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட இரு தலைவர்களை நீக்கியிருந்தார். அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸில் ஐக்கியமானார்கள்.
இதுவே காங்கிரசுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக இருந்தது. தொடர்ந்து பல மூத்த தலைவர்கள் வரிசையாகக் காங்கிரஸில் இணைந்தனர். காங்கிரஸ் மீண்டும் தெலுங்கானா அரசியலில் உள்ளே வந்தது. இந்த நேரத்தில் தான் காங்கிரஸ் கட்சி ஹைதராபாத்தில் மாபெரும் பேரணியை நடத்தி அங்கே கர்நாடகாவில் அறிவித்ததை போலவே 6 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தன. இது ஒட்டுமொத்த தெலுங்கானாவிலும் பேசுபொருள் ஆனது.
கேசிஆர் கட்சி: மறுபுறம் ஆட்சியில் இருக்கும் கேசிஆர் 119 இடங்களில் 115க்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தெலுங்கானா முதல்வர் கேசிஆர் இரண்டு இடங்களில் இருந்து போட்டியிடுவார். பொதுவாக 2 காரணங்களுக்காகவே ஒரு தலைவர் இரு இடங்களில் களமிறங்குவார். ஒன்று பெரிய மாநிலம் என்றால் இரண்டு பகுதிகளையும் கவர் செய்ய இரு தொகுதிகளில் போட்டியிடுவார்.
ஆனால், கேசிஆர் அதற்காகப் போட்டியிடுகிறார் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் போட்டியிடும் இரு தொகுதிகளும் அருகருகே தான் இருக்கிறது. எனவே, சொந்த தொகுதியில் அவருக்கு எதிர்ப்பு அதிகம் இருப்பதையே இது காட்டுகிறது. தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் நல்ல நிலையில் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
சீன் மாறியது: கடந்தாண்டு வரை தெலுங்கானாவில் நல்ல இடத்தில் இருந்த பாஜக, இப்போது கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.ஆறு மாதங்களுக்கு முன்பு போட்டியிலேயே இல்லாத காங்கிரஸ் இப்போது பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications