செம.. தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றது இப்படித்தான்! கேசிஆரை வீழ்த்திய கர்நாடகா தலைவர்கள்! எப்படி?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அதன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் உண்மையில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றதன் பின்னணியி்ல கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களின் உழைப்பும் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக தெலுங்கானாவில் ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்கானாவில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் காங்கிரஸ் 64 இடங்களில் வென்றது.
மாறாக 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் வென்று ஆட்சியில் இருந்த சந்திரசேகர்ராவின் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில் மட்டுமே ஜெயித்து ஆட்சியை பறிகொடுத்தது. இதுதவிர பாஜக 8, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, சிபிஐ 1 இடத்திலும் வென்றன. இதையடுத்து காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ரேவந்த் ரெட்டி முக்கிய காரணமாகும். மேலும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 6 முக்கிய வாக்குறுதிகளும் காங்கிரஸ் கட்சி வாகை சூடியதில் பெரும் பங்கு வகித்தது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடு இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.
இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரிதும் பாடுபட்டுள்ளனர். அதாவது தெலுங்கானா தேர்தலையொட்டி காங்கிரஸ் மேலிடம் அக்டோபர் மாதமே மேலிட பொறுப்பாளர்களை நியமித்தது. எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகம் உள்ளனர் என்பதை வைத்து கர்நாடகாவில் இருந்த அந்த சாதிய தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதாவது கர்நாடக எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டது.
48 கர்நாடகா எம்எல்ஏக்கள், 10 அமைச்சர்கள் சுமார் 45 நாட்கள் தெலுங்கானாவில் தங்கி பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். மேலும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டனர். மேலும் பல தலைவர்கள் தங்களின் நண்பர்கள் என்ற முறையில் பல வேட்பாளர்களுக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். அதன்படி பார்த்தால் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், கட்சி நிர்வாகிகள் என சுமார் 350க்கும் அதிகமானவர்கள் தெலுங்கானாவில் முகாமிட்டு காங்கிரஸை வெற்றி பெற வைத்துள்ளனர்.
இவர்கள் நேரடியாக வார்ரூம்களுக்கு விசிட் செய்து கட்சியின் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்ல உதவினர். சிறுபான்மையினர், ஓபிசிக்கள் மற்றும் தலித்துகளின் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு முழுவதுமாக கிடைக்கும் நோக்கத்தில் இவர்கள் பணியாற்றினர். இது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications