படிச்சு படிச்சு சொன்ன மகன்.. கண்டுகொள்ளாத கேசிஆர்.. தெலுங்கானாவில் படுதோல்விக்கு காரணமே இதுதான்!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி படுதோல்வியை அடைந்துள்ள நிலையில், இதற்கான காரணம் என்ன.. அங்கே கேசிஆர் செஞ்ச தவறு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தனி தெலுங்கானா என்ற இயக்கத்தை முன்னெடுத்து, 2014இல் வெற்றியும் பெற்றவர் கேசிஆர். அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து வென்று ஆட்சியைப் பிடித்தார் பாரத ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ்..

இதனால் இந்த முறை அவர் என்ன செய்யப் போகிறார் என்பதில் பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப அவரும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
தெலுங்கானா அரசியல்: ஆனால், அங்கே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே களநிலவரம் வேறாகவே இருந்தது. தொடக்கம் முதலே அங்கே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான ஒரு அலையே இருந்தது. பிஆர்எஸ் கட்சிக்குச் சாதகமான சூழல் இல்லை. தொடர்ந்து 9 ஆண்டுகளாக பிஆர்எஸ் ஆட்சியில் இருந்த நிலையில், மக்கள் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.
அதற்கேற்ப தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் கேசிஆர் கட்சி காங்கிரசிடம் தோற்றது. கடந்த 2014இல் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அங்கே பிஆர்எஸ் தோல்வி அடைவது இதுவே முதல்முறையாகும். 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் 64 இடங்களை வென்ற நிலையில், பிஆர்எஸ் கட்சிக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
9 ஆண்டுகள்: அரசியலில் ஒரு வாரம் என்பதே நீண்ட காலம் என்பார்கள். அப்படியிருக்கும் போது ஒன்பதரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம் தான்.. இதனால் மக்களிடையே எழுந்த எதிர்ப்பை பிஆர்எஸ் கட்சியால் சமாளிக்க முடியாமல் போனது.
கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி அங்கே விரிவான ஒரு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஏழைகளுக்குச் செய்த அனைத்து நலத்திட்டங்களையும் முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்தது. ஆனால், இதுவே அவர்களுக்கு எதிராகவும் போனது. ஏனென்றால் சில திட்டங்கள் நிதி விநியோகத்தின் பவரை எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்தது. இதனால் பாரபட்சம் மற்றும் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுவும் தேர்தல் காலத்தில் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பியது.
மகன் சொன்னதைக் கேட்காத கேசிஆர்: அதேபோல அவரது மகனும் ஐடி துறை அமைச்சருமான கேடி ராமராவ், தெலங்கானாவில் வேலைவாய்ப்பு அதிகம் உருவாக்கியுள்ளோம் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நாட்டிலேயே தெலுங்கானாவில் தான் அதிகம் என்றும் பிரச்சாரம் செய்தார். ஆனால் தெலுங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்ற புகார் அங்கே இருந்து கொண்டே தான் இருந்தது.
மக்களிடையே இருக்கும் எதிர்ப்பு மனநிலையை உணர்ந்து தான் தேர்தலுக்கு முன்பு கேசிஆர் மகன் ராமராவ், புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அவரது தந்தையிடம் வலியுறுத்தியுள்ளார். சுமார் 30 எம்எல்ஏக்களின் லிஸ்டை கேசிஆரிடம் கொடுத்த ராமராவ். மக்கள் கோபம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு தர வேண்டாம் என்று வலியுறுத்தி வலியுறுத்தி இருக்கிறார்.
தெலுங்கானா முதல்வர் கேசிஆரும் இந்த எம்எல்ஏக்களை அழைத்து நிலைமை விளக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட அவர் வாய்ப்பு கொடுத்தார். இதுவே கேசிஆர் கட்சிக்கு எதிராக மாறியது. இந்த 30 சீட்களில் பெரும்பாலான இடங்கள் காங்கிரஸ் பக்கம் போய்விட்டதாம்.
புதுமுகங்கள் வெற்றி: அதேநேரம் முதல் முறையாக பிஆர்எஸ் சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 9 பேர் வெற்றி பெற்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது கேசிஆர் தனது மகன் சொன்னதைக் கேட்டுக் கூடுதலாகப் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் களத்தில் போட்டி மிகக் கடுமையானதாக இருந்து இருக்கும். ஆனால் கேசிஆர் அதைக் கேட்காததே தோல்வியைக் கொடுத்துள்ளது.
அதேபோல கிராமப்புற வாக்குகளையும் பிஆர்எஸ் கட்சி இழந்துள்ளது. பிஆர்எஸ் வென்ற 39 இடங்களில் சுமார் பாதி இடங்கள் ஹைதராபாத் பகுதியில் இருந்து வந்தவை. இதற்கு அங்குள்ள ஐடி பார்க்குகள் முக்கிய காரணம். இது கேசிஆர் மகன் கேடிஆர் கவனித்து வந்த துறையாகும். அதேநேரம் மற்ற துறைகளில் போதிய வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் இல்லை. இதன் காரணமாகவே கிராமப்புற மக்களின் ஆதரவை கேிசஆர் முற்றிலுமாக இழந்தார்.












Click it and Unblock the Notifications