மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த ஐடி ஊழியர் - வீடியோ! சாப்ட்வேர் வேலை இழந்த சசி-யின் தில்லாலங்கடி வேலை
ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய ஒருவர் தனது வேலையை இழந்த காரணத்தால், வீட்டின் மொட்டை மாடியில், செடிகள் வளர்க்கும் தொட்டிகளில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது தொடர்கதையாகிவிட்டது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்காத காரணத்தால் பல்வேறு விபரீதமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இங்கு கதையே வேற...

சி.ஹெச்.சஷிதர் என்ற இந்த இளைஞர் ஒரு சாப்ட்வேர் சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் வேலை செய்யும் காலத்திலேயே கஞ்சாவுக்கு கடுமையாக அடிமையாகி இருந்தார். இதனால் அலுவலகம் செல்லாதது, அலுவலகத்தில் சரிவர பணி செய்யதாது என பல பிரச்சனைகள் நிறுவனத்தில் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் கஞ்சாவுக்கு அடிமையான காரணத்தால் தனது மாத சம்பளம் முழுவதையும் கஞ்சா வாங்குவதற்கே செலவு செய்துள்ளார். இந்த அடிமைத்தனம் தொடர்ந்ததால் அவர் தனது வேலையை இழந்தார்.
வேலை போன பிறகு கஞ்சா வாங்க பணம் இல்லாத நிலையில், அவர் சில கஞ்சா விதைகளைப் பெற்று வீட்டின் மொட்டை மாடியில் பானைகளில் கஞ்சா செடிகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். இதுதொடர்பான தகவல்களை சுற்றியிருந்தவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
A software engineer lost his job and started growing ganja plants on the terrace of his house in Hyderabad.
— Manas Muduli (@manas_muduli) April 21, 2026
Excise Department seized 17 marijuana plants that could yield 10 kilograms of ganja. pic.twitter.com/YzUxiJiDPY
இதுக்குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, ரங்காரெட்டி மாவட்டம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலான குழு, ஹைதராபாத் நாசரம் பகுதியில் உள்ள ஈஸ்ட் காந்திநகரில் உள்ள சஷிதர் வீட்டில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த 17 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செடிகள் முழுமையாக வளர்ந்திருந்தால் சுமார் 10 கிலோ கஞ்சா கிடைக்கும் என்று அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். சில செடிகள் ஏற்கனவே பூக்கத் தொடங்கியிருந்ததாகவும், சில மூன்று மீட்டர் உயரம் வரை வளர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் சஷிதர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்த காரணத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவரை காட்கேசர் எக்ஸைஸ் நிலையத்திற்கு மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு நல்ல வேலையில் இருந்த இளைஞர், போதைப்பொருளுக்கு அடிமையானதால் வேலையை இழந்து, இறுதியில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம், ஹைதராபாத் இளைஞர்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனம் எவ்வளவு ஆபத்தானது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கினாலும், பின்னர் வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு செல்லும் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. ஹைதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதிகாரிகள், இந்த சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாகக் கருதி மேலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications