ஹைதராபாத்தில் மோசமான நிலைமை.. குடிக்க கூட தண்ணீர் இல்லை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் குடிநீர் தட்டுப்பாடு (Hyderabad Water Crisis) உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகர் முழுவதும் குடிநீர் டேங்கர்களுக்கான முன்பதிவு வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. தற்போது கோடை காலம் முடிவடைந்தாலும் கூட வெயிலின் தாக்கம் தணியவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க ஹைதராபாத்தில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பருவமழை தாமதத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் வற்றி உள்ளன.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் 4 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அன்றாடத் தேவைகளுக்குத் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது
குறிப்பாக ஹைதராபாத்தின் மேற்கு பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் மோசமாகி இருப்பது தான் முக்கிய காரணமாகும். இங்கு சில பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. டேங்கர்களை எதிர்காத்து அவர்கள் குடிநீர் பெற வேண்டிய நிலை இருக்கிறது.
முஷீராபாத் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "தண்ணீர் விநியோகம் 4-5 நாட்களுக்கு ஒருமுறை என குறைந்துவிட்டது. டேங்கர் முன்பதிவு செய்தாலும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அன்றாட வீட்டு தேவைகளைச் சமாளிக்க நாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம்," என்றார்.
ரசூல்புரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, குழாய்களில் அசுத்தமான நீர் வருகிறது. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டுடன் சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்" என்றார்.
இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் டேங்கர்களை முன்பதிவு செய்து வருகின்றனர். மே மாதத்தின் கடைசி வாரத்தில் தினசரி டேங்கர் முன்பதிவுகள் 15,000 தாண்டிய நிலையில் தற்போது 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது ஹைதராபாத் மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் (HMWS&SB) கணித்ததை விட மிக அதிகமாகும்.
இதுபற்றி அந்த வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கே அசோக் ரெட்டி கூறுகையில், ''பல ஆண்டுகளாக வற்றாமல் இருந்த ஆழ்துளை கிணறுகள் (Bore wells) இந்த ஆண்டு காய்ந்து போனதே நிலைமை மோசமடையக் காரணம். வழக்கமாக, ஜனவரி மாதத்திலிருந்தே டேங்கர் முன்பதிவுகள் அதிகரிக்கத் தொடங்கும். முன்பு ஒரு நாளைக்கு சராசரியாக 1,500 முதல் 2,000 டேங்கர் முன்பதிவுகள் வரும். ஆனால் இந்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததாலும், கடந்த 4-5 ஆண்டுகளாக வற்றாத ஆழ்துளை கிணறுகள் கூட காய்ந்துவிட்டதாலும் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
கோடை காலத்தையொட்டி குடிநீர் வாரியம் ஒரு நாளைக்கு சுமார் 13,000 டேங்கர்கள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் தற்போது 20,000 டேங்கர்கள் வரை முன்பதிவு செய்யபப்டுகிறது. இதுவரை இப்படி நடந்ததே இல்லை. இப்படி நிலைமை கைமீறி சென்றதால் தற்போது இரவு நேரங்களிலும் 3 ஷிப்டுகளாகவும் டேங்கர்கள் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
டேங்கர் முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் பருவமழை பெய்தால் மட்டுமே ஹைதராபாத் தண்ணீர் பிரச்சனையில் இருந்து மீண்டெழும். இல்லாவிட்டால் நிலைமை வரும் நாட்களில் இன்னும் மோசமாகும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications