கிறிஸ் கெய்ல் பெயரில் நடந்த மோசடி.. ஐதராபாத் பெண்ணிடம் இருந்து ரூ.2.8 கோடி அபேஸ்.. தம்பியும் உடந்தை!
ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பெயரினை பயன்படுத்தி ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணிடம் இருந்து ரூ.2.8 கோடி மோசடி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலியான நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து முறைகேடு நடந்திருக்கிறது. இந்த முறைகேட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரும் உடந்தையாக இருந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பெயரை பயன்படுத்தி ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடியதன் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இதனால் அவர் பல்வேறு நிறுவனங்களுக்கும் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார்.

இதனால் கிறிஸ் கெய்ல் கென்யாவைச் சேர்ந்த காபி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்பட்டு வருவதாக கூறி ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். ரூ.5.7 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஐதராபாத்தைச் சேர்ந்த 60 வயதான பெண்ணை அவரது சகோதரர் மற்றும் மனைவி இருவரும் தொடர்பு கொண்டுள்ளனர். இதன் மூலமாக மாதம் 4 சதவிகித லாபம் கிடைக்கும் என்று உறுதி கொடுத்துள்ளனர்.
இந்த பணம் கென்யாவைச் சேர்ந்த காபி தூள் உற்பத்தி நிறுவனத்திற்கு செல்லும் என்றும், அந்த நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஆலை அமைத்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். தனது அக்காவை நம்ப வைப்பதற்காக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நடித்த விளம்பரங்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி இருக்கின்றனர்.
கிறிஸ் கெய்ல் அந்த நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராக இருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த காபி தூள் நிறுவனத்தின் உரிமையாளரை நன்றாக தெரியும் என்று கூறியதோடு, விரைவில் பார்ட்னராக இணையவுள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள். தனது சகோதரரின் வார்த்தைகளை நம்பிய அந்தப் பெண், மொத்தமாக ரூ.2.8 கோடி முதலீடு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக ரூ.2.2 கோடி முதலீடு செய்ய வைத்துள்ளார். இன்னும் சிலர் ரூ.70 லட்சம் வரை முதலீடு செய்திருக்கிறார்கள். மொத்தமாக ரூ.5.7 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் முதலீடு செய்தவர்கள் சந்தேகம் அடைய கூடாது என்று சிறிது காலத்திற்கு அவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கொடுத்து வந்துள்ளனர்.
அதனை லாபம் என்று நம்பி முதலீடு செய்தவர்களும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பணம் வருவது நிறுத்தப்பட்ட நிலையில், உடனடியாக தனது சகோதரரிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர், அமெரிக்காவில் அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறி வாயை அடைத்திருக்கிறார்.
பின்னர் பிரச்சனை அதிகரிக்க, சகோதரரிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். அவரது கேள்விகளுக்கு முறையாக பதில் கிடைக்கவில்லை. மொத்தமாக ரூ.5.7 கோடி முதலீடு செய்த நிலையில், அவர்களுக்கு ரூ.90 லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்க, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications