உஷார்! சலூனில் 'ஹேர் வாஷ்' செய்த பெண்ணுக்கு பக்கவாதம்.. ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்கா.. அது என்ன?
ஹைதராபாத்: சலூனுக்கு சென்று 'ஹேர் வாஷ்' (Hair Wash) செய்து கொண்ட பெண்ணுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பக்கவாதத்தை 'ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்' என மருத்துவர்கள் அழைக்கின்றனர். சலூனுக்கோ, அழகு சாதன நிலையத்துக்கோ செல்லும் அனைவரும் இதுகுறித்து கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பக்கவாதம் ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் தெரியும் எனக் கூறும் மருத்துவர்கள், உடனடியாக இதை கவனிக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் துன்பப்பட நேரிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

ஹைதராபாத் பெண்
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சீமா (40). இவரது சகோதரி மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திருமணத்துக்காக ஷாப்பிங் செல்வது போன்ற வேலைகளில் பிசியாக இருந்துள்ளார் சீமா. இதனிடையே, தனது முடியை வெட்டுவதற்காக சீமா அங்குள்ள பிரபல அழகு சாதன நிலையத்துக்கு இரு தினங்களுக்கு முன் சென்றுள்ளார்.

முடிவெட்டிக் கொள்ள..
அங்கிருந்த ஊழியர், முடியை வெட்டுவதற்கு முன்பு அதை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, அவரது தலை முடியை ஷாம்பு, கன்டிஷனர் உள்ளிட்டவற்றை போட்டு அவர் அலசியுள்ளார். சுமார் 15 நிமிடங்களுக்கு இது நீடித்துள்ளது. பொதுவாக, ப்யூட்டி பார்லரில் முடியை சுத்தம் செய்வதென்றால், 'வாஷ் பேஷின்' மேலே நமது தலையை பின்னோக்கி சாய்த்தவாறே வைத்திருப்பர்.

கீழே சரிந்து விழுந்தார்..
இந்நிலையில், தலை முடியை சுத்தம் செய்யப்பட்ட பின்னர், சீமா எழுந்து உட்கார்ந்துள்ளார். அப்போது அவருக்கு தலை சுற்றியுள்ளது. அடுத்த கணமே நாற்காலியில் இருந்து கீழே விழுந்த அவருக்கு வாய் கோண தொடங்கியது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக செகுந்தராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு கூறினர்.

பக்கவாதம்..
இதையடுத்து, சீமா கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு பக்கவாதம் வந்திருப்பதை உறுதி செய்தனர். ஒரு சாதாரண ஹேர்வாஷ் செய்துகொண்ட பெண்ணுக்கு எப்படி பக்கவாதம் வரும் என கேட்கிறீர்களா. நிச்சயமாக வரும் என்கிறார் சீமாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ப்ரவீன் குமார் யாதா.

"ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்" - மருத்துவர்கள் எச்சரிக்கை
இதுகுறித்து அவர் கூறுகையில், "சலூன் கடைக்கோ அல்லது அழகுசாதன நிலையத்துக்கோ செல்பவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது புதிதல்ல. இதற்கு "ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்" என்று பெயர். சலூன்களில் அதிக நேரமாக கழுத்தை பின்னோக்கி சாய்த்து வைத்திருப்பது; கழுத்தில் சொடக்கு எடுப்பது போன்றவற்றை செய்யும் போது மூளைக்கு செல்லும் நரம்புகளில் காயம் ஏற்படும். இதனால் மூளைக்கு ரத்தம் ஓட்டம் செல்வது தடைப்படும். இதுதான் "ப்யூட்டி பார்லர் ஸ்ட்ரோக்" எனப்படும் பக்கவாதம் வருவதற்கு காரணம். சலூன் கடைகள் அல்லது அழகுசாதன நிலையங்களில் இருக்கும் போது தலைசுற்றல், வாந்தி வருவதை போல உணர்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில், வாழ்க்கை முழுவதும் படுத்த படுக்கையாகவே இருக்க நேரிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications