சாகும் வரை அடிங்க! நபிகள் நாயகம் மீது விமர்சனம்.. ஐதராபாத் மாணவர் மீது கொடூர தாக்குதல் - பரபர வீடியோ
ஐதராபாத்: தெலுங்கானாவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐதராபாத்தின் சங்கர்பள்ளி பகுதியில் உள்ள ஐ.சி.எஃப்.ஏ.ஐ. பிசினஸ் ஸ்கூல் கல்லூரியில் படித்து வந்த ஹிமான்க் பன்சால் என்ற மாணவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரியின் சீனியர் மாணவர்கள் ஹிமான்கை கும்பலாக சேர்ந்து தாக்கியதுடன் அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட வற்புறுத்தி உள்ளார்கள்.

போலீசில் புகார்
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சீனியர் மாணவர்களால் ஹிமான்க் பன்சால் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் நேற்று ஐதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார்.

மாணவர்கள் மீது புகார்
தன்னை துன்புறுத்தியதாக கூறி மாணவர்கள் ரெவா, திபாஷா சர்மா, முஸ்ட்நீர், உமர், அபிஷேக், இமாத், சயீஃப் அலி கான், சுஹைல் (டேவிட்) ஆகியோர் மீது தாக்கப்பட்ட மாணவர் புகாரளித்து இருக்கிறார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பணத்தை பறித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

போலீஸ் விளக்கம்
மாணவரின் முகம், வயிற்று பகுதியில் கடுமையாக தாக்கியதுடன், சில வேதி பவுடர்களை கொடுத்து சாப்பிட வற்புறுத்தியுள்ளதாகவும், மாணவரின் ஆடையை கிழித்ததாகவும், சாகும் வரை தாக்குங்கள் என்று கூறி ஆடைகளை களைந்து தாக்கியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் விளக்கம்
இந்த வீடியோ கல்லூரி வளாகத்தில் வேகமாக பரவி தன்னை பலரும் கேலி செய்ததாகவும், முகம், எலும்பு பகுதிகளில் அரிப்பு இருப்பதாகவும், கண்கள், மூக்கு வீக்கமாக உள்ளதாகவும் தாக்கப்பட்ட மாணவர் கூறி உள்ளார். இனி கல்லூரி வளாகத்தில் மீண்டும் பார்த்தால் தாக்குவோம் என அவர்கள் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்கொலை சிந்தனை
பயம் மற்றும் தூக்கமின்மை காரணமாக தற்கொலை எண்ணங்கள் தனக்கு ஏற்பட்டதாகவும், கடந்த 3 நாட்களாக முறையாக தூக்கம் இன்றி தான் தவித்ததாகவும் அவர் புகாரில் கூறி இருக்கிறார். முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தான் தாக்கப்பட்டதாக கூறியுள்ள ஹிமான்க், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

கோமா நிலைக்கு அனுப்பனும்
ஹிமான்கை தாக்கும் சீனியர் மாணவர்கள், அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட கட்டாயப்படுத்தியதுடன், "இவரது கொள்கையை சரி செய்ய வேண்டும். சாகும் வரை தாக்க வேண்டும். கோமா நிலைக்கு அனுப்ப வேண்டும்." என மிரட்டல் விடுத்ததும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

பாஜக கண்டனம்
தெலுங்கானா மாநில பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி வெளியிட்ட பதிவில், "அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட சொல்லி ஹிமான்க் பன்சால் என்ற மாணவர் தாக்கப்பட்டு உள்ளார். அவர் படித்த ஐ.சி.எஃப்.ஏ.ஐ கல்லூரி ஏஐஎம்ஐஎம் கட்சித் எம்பி அசதுத்தீன் ஒவைசியின் தொகுதிக்குள் வருகிறது. ஆனால், அவர் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications