தெலுங்கானாவில் பாஜக ஆட்சி வந்தால் ஓவைசி கதி என்ன ஆகும் தெரியுமா? மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ.!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால் மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி, இந்தியாவை விட்டே நாடு கடத்தப்படுவார்; தமது செயல்களுக்காக பாஜக தலைவர்களின் காலில் விழுந்து அவர் மன்னிப்பு கேட்டால்தான் அப்போது இந்தியாவில் அவர் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவது பற்றி பரிசீலனையே செய்வோம் என்று பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசியிருப்பது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ., ராஜாசிங் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இத்தகைய சர்ச்சைகளாலேயே ராஜாசிங்கை பாஜக அக்கட்சியில் இருந்து நீக்கியும் வைத்தது. ஆனாலும் பின்னர் அவரை கட்சியில் சேர்த்து தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தந்தது. தற்போது கோஷாமஹால் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ராஜாசிங்.

இந்த நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ராஜாசிங். இது தொடர்பாக ராஜாசிங் பேசுகையில், ரம்ஜான் நோன்பு காலத்தில் ஓவைசி பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார். மத கலவரத்தைத் தூண்டுகிறார் ஓவைசி; ஹோலி பண்டிகையிலும் வன்முறையை தூண்டி விடுகிறார் ஓவைசி.
இப்படிப்பட்ட ஓவைசியை, தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் நாடு கடத்திவிடுவோம். பாஜகவில் இணைந்துவிடுகிறேன்.. ஆளை விடுங்கள் என்று பாஜக தலைவர்களின் கால்களில் விழுந்து கதறி அழுது கெஞ்சினால்தான் ஓவைசி, இந்தியாவிலேயே வாழ்வது குறித்து நாங்கள் பரிசீலனையே செய்வோம்.
அசாதுதீன் ஓவைசிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. ஓவைசியின் நண்பர்தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. ஓவைசியை நல்ல மருத்துவமனையில் ரேவந்த் ரெட்டி அனுமதித்து சிகிச்சை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜா சிங் பேசினார். அவரது இந்த கருத்து மிகப் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய சர்ச்சை
தெலுங்கனாவில் 101 கிமிரினல் வழக்குகள், 18 மத மோதல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்தான் இந்த ராஜாசிங். நபிகள் நாயகம் குறித்தது ராஜாசிங் இழிவாக பேசியது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ராஜாசிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானா ஆளுநராக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்த போது, ராஜாசிங்கை விடுதலை செய்ய கோரி பாஜகவினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு மனுக்களையும் கொடுத்தனர். இதுவும் சர்ச்சையானது.
அதாவது 101 கிரிமினல் வழக்குகள் மற்றும் 18 மத மோதல் வழக்குகளை எதிர்கொண்ட ஒரு நபரை விடுதலை செய்யக் கோரும் மனுவை எப்படி தமிழிசை சவுந்தரராஜன் பெறலாம் என்பதுதான் சர்ச்சை.
பின்னர் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட ராஜாசிங்குக்கு பாஜக மேலிடம் வாய்ப்பும் கொடுத்தது. அப்போதும் பாஜக தலைமை கடுமையான விமர்சனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications