‛ஜெய்ஸ்ரீராம்’ கூற மறுத்ததால் முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்.. ஐதராபாத்தில் பதற்றம்
ஐதராபாத்: தெலுங்கானாவில் ‛ஜெய் ஸ்ரீராம்'கூற மறுத்த 17 வயது நிரம்பிய முஸ்லிம் இளைஞர் மீது 40க்கும் அதிகமானவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் காளி தெய்வத்தை வழிபடும் வகையில் ‛போனலு' பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் போனலு பண்டிகை மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர்.

இதேபோல் சார்மஹால் பகுதியில் நேற்று முன்தினம் போனல் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமானவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஹுசைனியாலத்தில் வசிக்கும் முகமது ஷாஹித் அப்ரிடி என்ற 17 வயது இளைஞர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் தடுத்து நிறுத்தினர்.
அதன்பிறகு அவரது நெற்றியில் திலகமிட்டனர். மேலும் ‛ஜெய் ஸ்ரீராம்' கோஷமிடும்படி அவர்கள் கூறினர். இதற்கு அவர் மறுத்தார். இதனால் கோபமடைந்த மர்மநபர்கள் அவரை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு அவரை சரமாரியாக தாக்கினர். 40 பேர் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி ஷாகித் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஷாகித்தை தாக்கியதாக ரூபேஷ் ஷர்மா உள்பட 10க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications