"ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்.." ஓவைசி ஓபன் டாக்
ஹைதராபாத்: இந்தியாவின் முதல் முஸ்லீம் பிரதமராக ஹிஜாப் அணிந்த பெண் தான் பதவியேற்பார் என்றும் ஆனால் அதை தன்னால் நேரடியாக பார்க்க முடியுமா என்று தெரியவில்லை எனவும் ஐதரபாத் தொகுதி எம்பி ஓவைசி பேசினார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 3 கட்ட லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், 4-வது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 4-ம் கட்ட தேர்தல் ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா , மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 96 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இதில், உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்காள மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இதேபோல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஒய். எஸ். சர்மிளா ஆகியோரும் ஸ்டார் வேட்பாளர்களாக உள்ளனர்.
இதனிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அசாதுதீன் ஓவைசி பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது, இந்தியாவின் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓவைசி, இந்திய அரசியலில் விரைவில் அப்படியான ஒரு நிகழ்வு நடைபெறும்.
ஆனால், இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை நேரடியாக என்னால் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை" என்றார். அதேபோல், பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓவைசி, முஸ்லீம்கள் பற்றிய பிரதமர் மோடியின் உண்மையான நிலைப்பாட்டை அவரது பேச்சு காட்டுகிறது.
இதுதான் உண்மையான இந்துத்வாவின் சித்தாந்தம். பிரதமர் மோடி 75 வயது நிறைவடைந்ததும் பதவியில் இருந்து விலகுவார் என நான் நினைக்கவில்லை. மோடியை அரசியல் ரீதியாகவே தோற்கடிக்க வேண்டும். இதைத்தான் நான் நினைக்கிறேன்" என்றார். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஓவைசி பேசுகையில், இது ஒரு விஷயமே இல்லை.
வாழ்க்கையே ஒரு சவாலானதுதான். சவால் இல்லையென்றால் வாழ்க்கை சுவாரசியம்ற்றதாகிவிடும். நாங்கள் கடுமையாக உழைப்போம். மக்கள் முடிவு செய்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். இல்லையென்றால் எங்கள் கட்சியின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் இடுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications