பெண் உயிரிழப்பு: எப்போதும் துணையாக இருப்பேன்.. சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன்
ஹைதராபாத்: 20 ஆண்டுகளாக அந்த தியேட்டரில் படம் பார்க்கிறேன். இப்படி நடந்ததில்லை. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தது, அவரது மகன் காயமடைந்தது தொடர்பான வழக்குக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன் என்று சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் கூறினார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா - 2 கடந்த 5 ஆம் தேதி வெளியானது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் உருவானது. புஷ்பா படம் ஹிட்டான நிலையில், புஷ்பா 2 படத்துக்கு எதிர்ப்பார்ப்பு நிலவி இருந்தது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி இந்த படத்தின் சிறப்பு காட்சி சந்தியா திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தார். அல்லு அர்ஜுன் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவரை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களை முன்னோக்கி வர விடாமல் தடுத்தனர். அப்போது போலீசாரும் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ரேவதி என்ற 35 வயது பெண் உயிரிழந்தார். மேலும் அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னறிவுப்பு இன்றி நடிகர் அல்லு அர்ஜுன் இங்கு வந்ததால் தான் இப்படி நடந்ததாக கூறி அவர் மீதும், சந்தியா தியேட்டர்கள் உரிமையாளர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தியேட்டர் மேனஜர், ஊழியர் மற்றும் உரிமையாளர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் நேற்று அல்லு அர்ஜுன் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்து அங்கு வைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை 15 நாட்கள் சிறை காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக ஜாமீன் கோரி அல்லு அர்ஜுன் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
நேற்று இரவே அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், , போதிய ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கப்பெறவில்லை என்று இன்று காலையில் தான் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்று நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து வெளியே வந்தார். தொடர்ந்து ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அல்லு அர்ஜுன் கூறியதாவது:-
நான் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டரில் படம் பார்க்க வரும் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தற்செயலானது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒரு விபத்து தான். அப்படி கூட்ட நெரிசல் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தியேட்டருக்கு நான் படம் பார்க்க வருகிறேன். எப்போதும் இதுபோன்று நடந்ததில்லை.
எனது ரசிகளுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கவலைப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு துரதிருஷ்டமான நிகழ்வு. இந்த சம்பவத்துக்கு மிகவும் வருந்துகிறேன். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன். இதேபோல் காயமடைந்த அந்த பெண்ணின் மகனுக்கும் பாதுகாவலனாக இருப்பேன். கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தது, அவரது மகன் காயமடைந்தது தொடர்பான வழக்குக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். சட்டத்தை எப்போதும் மதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பெண் உயிரிழந்ததற்கு ஒருவர் மட்டுமே காரணம் அல்ல என்று நானி கூறியிருந்தார். இதேபோல், அல்லு அர்ஜுன் கைது நியாயமற்றது என்று பாலய்யா கூறியிருந்தார். ஒருவர் மீதே அனைத்து குற்றச்சாட்டுகளையும் வைப்பது மிகுந்த வேதனைக்குரியது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருந்தார்.
இப்படி பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், விமர்சனங்களுக்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, "அல்லு அர்ஜுன் ரசிகர்களை நோக்கி கையசத்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், அல்லு அர்ஜுன் பாகிஸ்தானுடன் போரிட்டு இந்தியாவுக்கு வெற்றி பெற்று தந்தாரா" என்றும் கூறியிருந்தார். இதேபோன்று உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications