இன்று இரவே தெலுங்கானா முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி? துணை முதல்வராக சீனியர்.. பரவும் தகவல்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில், இன்று இரவு ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியும், துணை முதலமைச்சராக பட்டி விக்ரமர்கா மல்லுவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலங்கானாவின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று இரவு 8.15 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பட்டி விக்ரமார்க மல்லு துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். மேலும் 2 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
நேற்று இரவு ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி, ஒருமனதாக ரேவந்த் ரெட்டியை அதன் தலைவராக ஏற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் யார் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இன்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில், ரேவந்த் ரெட்டியை, முதலமைச்சராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் வென்றுள்ள போதிலும், 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அதைவிட அதிகமாக உள்ளதால், (அதாவது பெரும்பான்மைக்கு தேவை 60, காங்கிரஸ் வென்றது 64) குதிரை பேரம் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் படுவேகமாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக நேற்று இரவு தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தலைமையில் முக்கிய தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 64 எம்.எல்.ஏக்களின் கடிதத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசையிடம் கடிதம் வழங்கினர். முன்னதாக, சந்திரசேகர ராவ், நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications