பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளம் கட் – எச்சரித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தங்கள் பெற்றோரை சரியாக கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை உறுதி செய்வதற்காக உயரதிகாரிகளின் மேற்பார்வையில் குழு அமைக்க அவர் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இது அந்த மாநிலத்தின் அரசு ஊழியர்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் பல தியாகங்களையும், கடின உழைப்பையும் செலுத்துகிறார்கள். இதில் வளர்ந்து நல்ல நிலைக்கு செல்பவர்களில் சிலர் மட்டுமே தங்களின் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். பலர் தங்கள் பெற்றோரை கைவிட்டுவிடுகிறார்கள். கடைசி காலத்தில் மிகுந்த வேதனையுடன் பெற்றோர்கள் கடக்கிறார்கள். முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் கவலைக்குரிய செய்தியாக உள்ளது.

பணி ஆணை
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் அரசு தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத்துறைகளின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் அங்கு தேர்வாணையம் மூலம் குரூப் 2 பிரிவுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சியடைந்த 783 பணியாளர்களுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பணி ஆணைகளை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், "அரசு ஊழியர்களுக்கு கடமை எவ்வளவு முக்கியமோ அதேபோல குடும்ப வாழ்க்கையும் முக்கியம். பலர் குடும்ப வாழ்க்கையை சரியாக கவனிப்பதில்லை. முக்கியமாக பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பழக்கம் அதிகமாக உள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோரை சரியாக கவனிக்க வேண்டும். அப்படி பெற்றோரை கவனிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவிகிதம் பிடிக்கப்படும்.
பெற்றோர் முக்கியம்
பிடித்தம் செய்யப்படும் தொகை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பெற்றோர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்களை போலவே அவர்களின் பெற்றோரும் மாத சம்பளம் பெறும் நிலை ஏற்படும். எந்த நிலை சென்றாலும் நம் வந்த வழியை மறந்துவிடக்கூடாது. பெற்றோர் தான் உங்களுக்கான ஆணி வேர். உங்களை வளர்ப்பதற்காக அவர்கள் செய்த தியாத்தை மறந்துவிடக்கூடாது.
இதை ஏதோ சும்மா சொல்லவில்லை. அரசு ஊழியர்கள் இதை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், மசோதா தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணா மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். "என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications