அல்லு அர்ஜுன் சிறை செல்ல வேண்டாம்.. கீழமை நீதிமன்ற உத்தரவை தெலுங்கானா ஹைகோர்ட் காலி செய்தது எப்படி?
ஹைதராபாத்: கடந்த 4ம் தேதி தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் இன்று திடீரென்று கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவால் அல்லு அர்ஜுன் 14 நாள் சிறை செல்வதில் இருந்து தப்பித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவ வருகிறது. இதற்கிடையே தான் அல்லு அர்ஜுன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அதாவது கடந்த 5ம் தேதி 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. ஆனால் அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4ம் தேதி படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார்.
இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மீது சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அல்லு அர்ஜுன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதி ஜுவாடி ஸ்ரீதேவி வழக்கை விசாரித்தார்.
அப்போது ‛‛அல்லு அர்ஜுன் நடிகராக உள்ளார். அவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.இதனால் அவர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் நடிகர் என்று கூறி அவரது உரிமையை நம்மால் பறிக்க முடியாது. இந்த பூமியில் அவரும் வாழ வந்த மனிதர் தான். அவருக்கும் அனைத்து விதமான சுதந்திரங்களும் உள்ளது. மேலும் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக அவரை கருத முடியாது எனக்கூறிய நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த இடைக்கால ஜாமீன் உத்தரவால் அல்லு அர்ஜுனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 14 நாள் நீதிமன்ற காவல் செல்லாததாகி உள்ளது. இருப்பினும் இடைக்கால ஜாமீன் தொடர்பான உத்தரவு சிறைத்துறை அதிகாரிக்கு செல்லும் வரை அல்லு அர்ஜுன் சிறையில் இருக்க வேண்டும். அந்த ஆவணங்கள் சிறைத்துறைக்கு சென்றவுடன் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவார். இதனால் அல்லு அர்ஜுன் 14 நாள் சிறையில் இருக்க வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
