காங்கிரசுக்கு ஷாக்.. இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் அசாருதீன் தெலுங்கானாவில் தோல்வி
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தோல்வியடைந்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அன்றயை தினம் ஒரே கட்டமாக 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இறுதியில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
மாறாக ஆட்சியில் இருந்த முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இவர் தெலுங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 430 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 204 பேர் ஆண் வாக்காளர்கள். 1 லட்சத்து 77 ஆயிரத்து 207 பேர் பெண் வாக்காளர்கள். 19 பேர் 3ம் பாலினத்தவர்கள்.
இந்த தொகுதியில் அசாருதீனை எதிர்த்து பிஆர்எஸ் கட்சி சார்பில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான மகந்தி கோபிநாத் போட்டியிட்டார். இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே அசாருதீன் முன்னிலை வகித்து வந்தார். 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 1,092 ஓட்டுகள் அசாருதீன் முன்னிலை பெற்றிருந்தார். 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த வாக்கு எண்ணிக்கை 640 ஆக குறைந்தாலும் கூட அவர் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் தற்போது 7 வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அசாருதீன் பின்னடைவை சந்திக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டார். இறுதியாக இவர் பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி கோபிநாத்திடம் 16,337 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். வெற்றி பெற்ற மகந்தி கோபிநாத் கடந்த முறையும் இந்த தொகுதியில் வென்ற நிலையில் இப்போது மீண்டும் வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications