அக்னிபாத் போராட்டத்த தூண்டுனதே ”இவர்”தானாம் -தெலுங்கானாவில் ராணுவ பயிற்சி மையம் நடத்தியவர் கைது
ஐதராபாத்: செகந்திராபாத்தில் அக்னிபாத்துக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டதாக ராணுவ பயிற்சி மையம் நடத்தி வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னிவீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஏன் இந்த அக்னிபாத்?
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

இளைஞர்கள் கொந்தளிப்பு
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகார், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். தெலுங்கானாவின் செகந்திராபாத்திலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.
Recommended Video

இளைஞர்கள் குற்றச்சாட்டு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் இந்த திட்டம் இளைஞர்களை முட்டாள்களாக்குவதாகும் என இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர் கைது
இந்த நிலையில் செகந்திராபாத்தில் ரயில் நிலையத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தூண்டியதாக சுப்பாராவ் என்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 18 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இவர், ராணுவ பயிற்சி மையத்தை 2010 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இங்கு பயிற்சி ஆயிரத்துக்கும் அதிகமானோர் ராணுவம், கடற்படை, விமானப்படை போன்றவற்றில் பணிபுரிகின்றனர். வாட்ஸ் அப் குழுமத்தின்மூலம் சுப்பாராவ் தன்னிடம் பயிற்சிபெற்ற மாணவர்களை வன்முறைக்கு தூண்டியதாக ஐதராபாத் ரயில்வே போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications