105 தொகுதிகளில் வெற்றி.. தெலங்கானாவில் மீண்டும் பிஆர்எஸ் ஆட்சி தான்.. உறுதியளித்த சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் 95 முதல் 105 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் தான் தெலங்கானாவில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நவம்பரம் 30ம் தேதி ஒரே கட்டமாக அங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தெலங்கானாவை பொறுத்தமட்டில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழலில் அங்கு பிஆர்எஸ், காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் பாஜக என நான்கு கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் நேரடி போட்டி என்பது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தான் உள்ளது.
இந்த 2 கட்சியில் ஒன்று தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பிஆர்எஸ் கட்சி பிரசாரங்களை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 95 முதல் 105 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கஜ்வெல் தொகுதியில் பிஆர்எஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
கடந்த 2016ம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி என்பது குறைந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டு சில திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலத்தில் மந்தம் ஏற்பட்டது. ஆனாலும் கூட சில தியாகங்களை செய்து தெலங்கானாவில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வரும் தேர்தலிலும் கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்து மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க மீண்டும் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெறுவது முக்கியமானது. ஏனென்றால் மாநிலத்தின் தற்போதைய வளர்ச்சியில் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. இன்னும் தொடர்ந்து முன்னேற வேண்டியது அவசியமாகும்.
மேலும் இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் தெலங்கானாவை பொறுத்தமட்டில் காலேஷ்வரம் திட்டம், கொண்டபோச்சம்மா மற்றும் மல்லண்ண சாகர் நீர்த்தேக்கங்களின் கட்டுமானங்கள் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி உள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கஜ்வெல் தொகுதியில் 2 முறை என்னை மக்கள் வெற்றியடைய செய்துள்ளனர். எம்எல்ஏ என்ற முறையில் தொகுதியும் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து தொகுதியை மேம்படுத்த பணி செய்வேன். இதுபோன்ற செயல்பாட்டால் வரும் சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி 95 முதல் 105 தொகுதிகளில் வெற்றி பெறும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications