செம ட்விஸ்ட்.. தெலங்கானாவில் மீண்டும் கேசிஆர் ஆட்சி! கலங்கும் காங்கிரஸ், பாஜக - புது கருத்து கணிப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் அங்கு முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் எனவும், காங்கிரஸ், பாஜக கட்சிகள் சறுக்கலை சந்திக்கும் எனவும் புதிய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி (முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி) கட்சி வெற்றி பெற்றது.

முதல்வராக அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகரராவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் தெலங்கானாவில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முனை போட்டி: அதன்படி அடுத்த மாதம் (நவம்பர்) 30ம் தேதி ஒரே கட்டமாக தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தெலங்கானாவை பொறுத்தமட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ், காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் பாஜக என நான்கு கட்சிகள் களத்தில் உள்ளன.
பிஆர்எஸ் VS காங்கிரஸ்: இதில் நேரடி போட்டி என்பது பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தான் உள்ளது. இருப்பினும் பாஜக மற்றும் ஓவைசியின் கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன. பிஆர்எஸ் கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் முதற்கட்டமாக 55 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. விரைவில் அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது.
கருத்து கணிப்பு: இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பல கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது ‛கிரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ்' (Grohnd Zero Research) கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது கடந்த மாதம் 25ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை மொத்தம் 70 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
பிஆர்எஸ் ஆட்சி: இந்த கருத்து கணிப்பின் முடிவின்படி தெலங்கானாவில் மீண்டும் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சி 2வது இடமும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 3வது இடத்தையும் பிடிக்கும் எனவும், பாஜக 4வது இடத்துக்கு தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஆர்எஸ் வெற்றி: இந்த கருத்து கணிப்பின்படி தற்போதைய தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 41 சதவீத ஓட்டுகளை பெற்று 63 இடங்களில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 60 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை எனும் நிலையில் பிஆர்எஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு ஷாக்: பல கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
காங்கிரசுக்கு எத்தனை இடம்: அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35 சதவீத ஓட்டுகளுடன் 43 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருத்து கணிப்பல் பங்கேற்றாதவர்களின் மனங்களை காங்கிரஸ் கட்சியினர் கவரும் வகையில் பிரசார யுக்திகளை செய்தால் நிச்சயம் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் போட்டி கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு பின்னடைவு: அதேபோல் ஓவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி 3 சதவீத ஓட்டுகள் பெற்று 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், பாஜக 8 சதவீத ஓட்டுக்கள் பெற்று 5 தொகுதிகள் வரை வெல்லலாம் எனவும், மற்றவர்கள் 13 சதவீதம் ஓட்டுகளை பெற்றாலும் கூட ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தெலங்கானாவில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த கருத்து கணிப்பு அந்த கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியமாகவே அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications