கர்நாடகாவில் 'பேசிஎம்' சக்சஸ்.. இப்ப தெலங்கானாவில் 'ஏடிஎம்'.. கேசிஆருக்கு ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் 'பேசிஎம்' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து தேர்தலில் வெற்றி பெற்றது.அந்த சக்சஸ் பார்முலாவில் தெலுங்கானாவில் வேறுவிதமாக அறிமுகம் செய்துள்ளது. 'காலேஸ்வரம் ஏடிஎம்' என்று தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, அதற்காக ஏடிஎம்களை அமைத்திருக்கிறது.
இந்த ஆண்டு தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது. கிட்டத்தட்ட மினி நாடாளுமன்ற தேர்தலை போல் நடைபெற உள்ள இந்த தேர்தல்களில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி (கேசிஆர் கட்சி), பாஜக இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதியும், மிசோரம் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதியும், இறுதியாக தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதியும் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மற்றும் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் கே.சந்திரசேகர் ராவைக் குறிவைத்து, அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் 'காளேஸ்வரம் ஏடிஎம்' பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர். கர்நாடகாவில் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக பேசிஎம் என்ற பிரச்சாரம் செய்தார்கள். பேசிஎம் பிரச்சாரம் கர்நாடகாவில் கைகொடுத்தது. அங்கு பாஜகவை வீட்டுக்கு அனுப்பி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதே பாணியில் தான் 'காளேஸ்வரம் ஏடிஎம்' என்ற பெயரில் அம்மாநில முதல்வர் கேசிஆர் என்ற சந்திரசேகர் ராவை குறிவைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்காக "காளேஸ்வரம் கரெப்சன் ராவ்" (அதாவது காளேஸ்வரம் திட்டத்தில் ஊழல் செய்த ராவ்) என்று கேசிஆரை குறிவைத்து கோஷத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் உருவாக்கி உள்ளார்கள். காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் ஆளும் பிஆர்எஸ் அரசு 1,00,000 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மெட்டிகட்டாவில் உள்ள காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியான தடுப்பணைகளில் ஒன்று சேதமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் 1 லட்சம் கோடி ரூபாயை ஒரே திட்டத்தில் ஊழல் செய்து சம்பாதிப்பதற்காக காளேஸ்வரம் திட்டத்தை 'ஏடிஎம்' ஆக கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தியதாக மாநில மற்றும் மத்திய காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். அதனால் தான் ஏடிஎம் போன்று உருவாக்கி ஒரு லட்சம் கோடியை கேசிஆர் ஊழல் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்யத்தொடங்கி உள்ளது காங்கிரஸ் கட்சி,
இதனிடையே தெலங்கானா மாநிலத்தின் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிதாக கட்டப்பட்ட மேடிகட்டா தடுப்பணையின் தூண்களில் இந்த மாத தொடக்கத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு மூழ்குவதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் எதிர்க்கட்சிகள் கேசிஆருக்கு எதிராக திரும்பி உள்ளன. உலகின் மிகப்பெரிய லிப்ட் பாசனத் திட்டமாகப் போற்றப்படும் காலேஸ்வரம் திட்டம், ஜூன் 2019 இல் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆரால்) திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications