ஓரம் போ.. ஓரம் போ.. பிரியங்கா 'வண்டி' வருது!தெலுங்கானாவை கலக்கப் போகும் காங்கிரஸ் பேருந்து யாத்திரை!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸ் கமிட்டி, 119 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யக் கூடிய பேருந்து யாத்திரை ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்பது கருத்து கணிப்புகளின் முடிவுகள். ஆனால் பாஜகவோ, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; பாஜகதான் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியானது பெண்களுக்கு மாதம் ரூ2,500 உதவித் தொகை உள்ளிட்ட 6 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. இது தெலுங்கானா தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி, பேருந்து யாத்திரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. இப்பேருந்து யாத்திரையில்
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனராம். இந்த யாத்திரையை தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியானது அக்.14 அல்லது 15-ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்தி அக்டோபர் 18 முதல் 20-ந் தேதி வரை மூன்று நாட்கள் இந்த யாத்திரையில் பங்கேற்கக் கூடுமாம்.
முன்னதாக இந்த பேருந்து யாத்திரையை பிரியங்கா காந்தி தொடங்கி வைத்து சில நாட்கள் தொடர்ச்சியாக பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்த மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் செல்லும் இந்த பேருந்து யாத்திரை, காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளையும் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான சித்தராமையா (கர்நாடகா), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகெல் (சத்தீஸ்கர்) மற்றும் சுக்விந்தர் சிங் சுகு (இமாச்சலப் பிரதேசம்) ஆகியோருடன் மல்லிகார்ஜூன கார்கேவும் இப்பேருந்து யாத்திரையில் பங்கேற்க இருக்கிறாராம். இவர்களுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பட்டாளமும் இணைந்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனராம்.












Click it and Unblock the Notifications