தெலங்கானாவில் இழுபறி.. காங்.,-பிஆர்எஸ்க்கு ஷாக்.. திரும்ப வைத்த சிஎன்என்-நியூஸ் 18 கருத்து கணிப்பு
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை தான் அமையும் என காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது சிஎன்என்-நியூஸ்18 கருத்து கணிப்பு முடிவுகள்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலங்கானா தனி மாநிலமாக 2014ல் உதயமானது. இதையடுத்து 2014ல் முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பிஆர்எஸ் (முன்பு தெலங்கானா ராஷ்ட்ரிய தளம்) கட்சி வெற்றி பெற்று சந்திரசேகர ராவ் முதல்வரானார். அதன்பிறகு சட்டசபை பதவிக்காலம் முடியும் முன்பே ஆட்சியை கலைத்தார்.
இதையடுத்து 2018 ல் வது முறையாக தேர்தல் நடந்தது. இதிலும் சந்திரசேகரராவின் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அவர் 2வது முறையாக முதல்வரானார். இந்நிலையில் தான் இன்று 3வது முறையாக அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது.

இன்று ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. மொத்தம் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் சிஎன்என்-நியூஸ் 18 சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பின்படி தெலங்கானாவில் எந்த கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 56 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பிஆர்எஸ் கட்சி 48 தொகுதிகளிலும், பாஜக 10 இடங்களிலும் ஓவைசி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக, ஓவைசியின் கட்சிகள் என யாருக்கும் அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இதன்மூலம் தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என சிஎன்என்-நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications