ரிசல்ட்டை விடுங்க ஆட்சி முக்கியம்! தெலுங்கானாவில் நாளையே பதவியேற்கும் சந்திரசேகர் ராவ்? பரபர பின்னணி
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் தேர்தலில் வெற்றி அல்லது மெஜாரிட்டி கிடைக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக தொகுதிகளை வென்றால் நாளையே பதவியேற்ற பிஆர்எஸ் கட்சியின் முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா புதிய மாநிலமாக 2014ல் உருவானது. 2014, 2018 ஆகிய தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் கே சந்திரசேகர் ராவ் முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது அவரே முதல்வராக உள்ள நிலையில் தான் தெலுங்கானாவில் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தெலுங்கானாவை பொறுத்தமட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சி, பாஜக, மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் பாஜக, ஓவைசி கட்சி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறப்படும் நிலையில் இந்த தேர்தலில் நேரடி போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் ஆளும் பிஆர்எஸ் கட்சிகள் இடையே தான் உள்ளது.
இன்றைய ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? இல்லை காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுக்குமா? என்பது தெரிந்துவிடும். இருப்பினும் பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக உள்ளன. அதாவது பிஆர்எஸ் கட்சியை விட காங்கிரஸ் கட்சி தனா் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய மற்றுமு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக உள்ள நிலையில் பிஆர்எஸ் கட்சியினர் சோர்ந்து போகவில்லை. கருத்து கணிப்புகளை பொய்யாக்கி நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைக்க பிஆர்எஸ் கட்சியின் முதல்வர் சந்திரசேகரராவ் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு நிகரான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் எந்தவித தாமதம் இன்றி நாளையே மாநிலத்தில் ஆட்சி அமைக்க சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். அதாவது ஆட்சியமைத்த பிறகு காங்கிரஸ் கட்சி, பாஜக, ஓவைசியின் கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற்று பெரும்பான்மையை நிரூபித்து விடலாம் என எண்ணி அவர் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாறாக பெரும்பான்மை கிடைக்கவில்லை என ஆட்சியமைக்காமல் காத்திருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட தங்களின் கட்சி எம்எல்ஏக்களை கூட இழுத்து ஆட்சியை பிடிக்கலாம் என பிஆர்எஸ் கட்சி தலைமை நினைக்கிறது. இதனால் எந்தவித தாமதமும் இன்றி நாளையே பதவியேற்க பிஆர்எஸ் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில் பிஆர்எஸ் கட்சியினர் எம்எல்ஏக்களை இழுக்கலாம் என்பதால் காங்கிரஸ் மேலிடம் உஷாராகி உள்ளது. எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் திறமை படைத்த கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் தற்போது தெலுங்கானா சென்றுள்ள நிலையில் இன்னும் சில மேலிட தலைவர்கள் தெலுங்கானா விரைந்து செல்ல உள்ளனர். இவர்கள் இன்று வெற்றி பெறும் எம்எல்ஏக்களை ஹைதராபாத்தில் உள்ள ரெசார்ட்டுக்கு அழைத்து சென்று பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications