ராகிங் கொடுமை.. ஜாதி வேறு.. தெலங்கானா மருத்துவக் கல்லூரியில்.. பழங்குடியின மாணவி தற்கொலை
ப்ரீத்தியின் ஜாதியை காரணமாக வைத்து அவர் ராகிங் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
ஹைதராபாத்: தெலங்கானா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த பழங்குடியின மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், சீனியர் மாணவர் ஒருவரின் தொடர் ராகிங் காரணமாகவே அந்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது.
மேலும், ஜாதியை காரணமாக வைத்து அவர் கீழ்த்தரமாக ராகிங் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் தற்கொலைகள்
இந்தியாவில் சமீபகாலமாகவே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐஐடி, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதை காண முடிகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட, பாம்பே ஐஐடி நிறுவனத்தில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கல்வி நிறுவனத்தில் சக மாணவர்களும், பேராசிரியர்களும் ஜாதியை காரணமாக வைத்து பாகுபாடு காட்டியதும், கிண்டல் செய்ததுமே அவர் தற்கொலை செய்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

மருத்துவ மாணவி ப்ரீத்தி
இதுபோலவே, மெட்ராஸ் ஐஐடி உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த காலங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சூழலில், தெலங்கானாவிலும் இப்படியொரு பரிதாப சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ககாடியா மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் ப்ரீத்தி (26) என்ற மாணவி மருத்துவ முதுநிலைப் படிப்பில் (எம்.டி) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்கொலை
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ப்ரீத்தி யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு எம்ஜிஎம் மருத்துவமனையில் பயிற்சிக்காக ப்ரீத்தி சென்றிருந்தார். ஆனால் இன்று காலை அவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது பெற்றோர் தகவல் தெரிவித்ததை அடுத்து, அவரை தேடி பார்த்த போது மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் ப்ரீத்தி இறந்துகிடந்தார். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

ராகிங் கொடுமை
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது செல்போனில் உள்ள வாட்ஸ் அப் சாட்டுகள், யார் யாரிடம் என்னென்ன பேசினார் என்பது குறித்தும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தொடர்ந்து ப்ரீத்தியை கடுமையாக ராகிங் செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், ப்ரீத்தியின் ஜாதியை காரணமாக வைத்து அவர் ராகிங் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, அந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.












Click it and Unblock the Notifications