"ஒரு புடி.." வகை வகையா.. ருசி ருசியாக! மாப்பிள்ளைக்கு 100 உணவுகளுடன் விருந்து தந்து அசத்திய மாமியார்
ஹைதராபாத்: திருமணம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வரும் புது மாப்பிள்ளைக்கு விருந்து கொடுப்பது சாதாரணம் தான். ஆனால், இங்கு தெலுங்கானாவில் அந்த விருந்தை மாமியார் ஒருவர் அடுத்த லெவலுக்கே எடுத்துப் போய் விட்டார்! 100 வகையான உணவுகளுடன் தடபுடலாகத் தங்கள் மருமகனுக்கு விருந்து கொடுத்து மாமியார் அசத்தியுள்ளார். இதுபோக ஒரு தங்கப் பரிசையும் கொடுத்துள்ளார்.
நமது நாட்டில் திருமணமான உடன் மாமனார் வீட்டிற்குச் செல்லும் புது மாப்பிள்ளைக்குக் கவனம் பயங்கரமாக இருக்கும். மாப்பிள்ளைக்கு என்ன தேவையோ.. என்ன பிடிக்குமோ அதைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார்கள். சில நேரங்களில் இதுபோல கொடுக்கப்படும் விருந்துகள் எங்கோ வேற லெவலுக்கு போய்விடும்.

ஹைதராபாத் விருந்து
அப்படியொரு சம்பவம் தான் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள வனபர்த்தி மாவட்டத்தில் தனது மாப்பிள்ளைக்கு நூறு வகையான உணவுகளுடன் பிரம்மாண்டமான விருந்தைக் கொடுத்திருக்கிறார் மாமியார்! அக்டோபர் 3ம் தேதி அந்த புது மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்குச் சென்றபோது இந்த விருந்து நடைபெற்றது. இந்தப் பிரம்மாண்ட விருந்தின் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கோத்தகோட்டாவை சேர்ந்தவர் குட்டா சஹானா.. இவர்தான் மருமகனுக்கு 100+ உணவுகளுடன் பிரம்மாண்ட உணவு கொடுத்து அசத்தியுள்ளார். அந்த ஊர் வழக்கப்படி தசரா சமயத்தில் விருந்தைக் கொடுக்க வேண்டுமாம். ஆனால், இவர் அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். தனது மருமகனுக்கு பிரம்மாண்ட விருந்தைக் கொடுத்து அசத்தியுள்ளார்.
100 உணவு
இது தொடர்பாக அந்த வீடியோவில் குட்டா சஹானா மேலும் கூறுகையில், "தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையின்போது மருமகனுக்கு விருந்து படைப்பது ஒரு பாரம்பரியம்.. இந்த விருந்துக்காக 60 வகையான இனிப்புகள், 30 வகையான காய்கறி பொரியல் மற்றும் 10 வகையான சாதங்களை நான் செய்தேன். திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக எங்கள் மருமகன் வீட்டிற்கு வருகிறார். அவருக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவே இந்த விருந்தை ஏற்பாடு செய்தோம்" என்று அவர் கூறினார்.
நம்ப முடியல
தசராவின்போது விருந்து இருக்கும் எனத் தெரியும்.. ஆனால் இப்படியொரு பிரம்மாண்ட விருந்தைத் தான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் மருமகன் நிகித்.. வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நிகில் மேலும் கூறுகையில், "நான் தசரா பண்டிகைக்காக கோத்தகோட்டாவில் உள்ள எனது மாமியார் வீட்டுக்கு வந்தேன். அப்போது தான் இந்த விருந்தைக் கொடுத்தார்கள்.. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று நிகித் குறிப்பிட்டார்.
தங்கப் பரிசு
முன்பே நிகித்துக்கு 101 உணவு வகைகளை விருந்தாகக் கொடுப்பேன் என சஹானா உறுதி கொடுத்துள்ளார். ஒரு உணவு குறைந்தாலும் தங்க பரிசாக கொடுப்பேன் என சொல்லியிருக்கிறார். இப்போது 100 உணவுகளைச் செய்த அவர், ஒரு உணவு குறைந்துவிட்டது எனச் சொல்லி மருமகனுக்குத் தங்கத்தையும் பரிசாகக் கொடுத்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் இந்தக் கறித் திருவிழா மிகவும் பிரசத்தி பெற்றது. புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் மாமனார் வீட்டிற்கு வரும்போது இந்த விருந்தைக் கொடுப்பார்கள். இது அங்குக் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியமாகும். பொதுவாகச் சங்கராந்தி பண்டிகையின்போது இதுபோல அங்குப் புது மாப்பிள்ளைக்கு விருந்து கொடுப்பார்கள் .












Click it and Unblock the Notifications