தெலுங்கானா: தெரு நாயா? காவல் நாயா? நவம்பர் 30-ல் தெரியும்.. கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி பாய்ச்சல்!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தம்மை தெலுங்கானாவில் காவல் நாய் என கூறி வருகிறார்; கேசிஆர் காவல் நாயா? தெரு நாயா? என்பது வரும் 30-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும் என்றார் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளுக்கு நடுவே பாஜகவும் களம் காண்கிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என பல தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் பிஆர்எஸ், காங்கிரஸ் இரண்டுமே சமமான இடங்களைப் பெற்று தொங்கு சட்டசபைக்கும் கூட சாத்தியம் என்கின்றன சில கருத்து கணிப்புகள்.

தெலுங்கானாவில் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. தெலுங்கானா முதல்வர் கேசிஆர், காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை கடுமையாக தாக்கி வருகிறார். தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ரைபிள் (துப்பாக்கி) தூக்கியவர் ரேவந்த் ரெட்டி. அதனால்தான் ரைபிள் ரெட்டி என்ரு அவருக்கு பெயர். தெலுங்கானா தனி மாநில போராட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் பல நூறு உயிர்கள் பறிபோகின. இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார்.
இதற்கு பதிலடியாக ரேவந்த் ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது; கமரெட்டி தொகுதியில் முதல்வர் கேசிஆர் போட்டியிடுகிறார். ஏற்கனவே கஜ்வெல் தொகுதியில் கேசிஆர் வெற்றி பெற்றதால் அங்கு விளைநிலங்கள் அனைத்தையும் கேசிஆர் குடும்பம் வளைத்துப் போட்டுவிட்டது. கமரெட்டி தொகுதியில் கேசிஆரை ஜெயிக்க வைத்தால் ஒட்டுமொத்த விளைநிலத்தையும் கேசிஆர் குடும்பம் அபகரித்துவிடும். தங்கள் குடும்பத்தை தெலுங்கானாவின் காவல் நாய் என பெருமிதம் பேசுகிறது கேசிஆர் குடும்பம். கேசிஆர் குடும்பம் வெறி பிடித்த தெரு நாயா? காவல் நாயா? என்பது வரும் 30-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும். ஒரு வாக்காளருக்கு ரூ10,000 கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குகிறது கேசிஆர் குடும்பம். கமரெட்டி தொகுதியில் ரூ200 கோடி செலவழித்து ரூ2,000 கோடி மதிப்பிலான நிலத்தை களவாடப் பார்க்கிறது கேசிஆர் குடும்பம். இவ்வாறு ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications