சுஷ்மிதா 5 மாத கர்ப்பம்.. கரெக்ட்டா வளைகாப்பு நேரத்தில் கணவன் கேட்ட அந்த கேள்வி! ஆடிப்போன தெலுங்கானா
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை எல்லாருக்கும் ஏற்படுத்தி உள்ளது.. 5 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் சுஷ்மிதாவை சந்தேகக்கணைகளால் மாமியாரும், கணவரும் துளைத்தெடுத்துள்ளனர்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா? இந்த விவகாரம் இப்போது போலீஸ் விசாரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சுஷ்மிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்ற நபருக்கும் கடந்த 18 மாதங்களுக்கு முன்புதான் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்றது இவர்களது குடும்ப வாழ்க்கை.. சுஷ்மிதாவும் கர்ப்பமானார். இதற்கு பிறகுதான் பிரச்சனைகள் வெடிக்க தொடங்கின..

தெலுங்கானா சுஷ்மிதா
தான் கர்ப்பமாக இருப்பதாக சுஷ்மிதா சொன்னதுமே, கணவன் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பார்த்தால், சந்தேக புயலை கிளப்ப துவங்கி விட்டார்கள்.. இதில் கணவன் அபிலாஷும் தன் பங்குக்கு, அம்மாவுடன் சேர்ந்து சுஷ்மிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார்.. வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது? என்னுடைய குழந்தைதான் என்பதை நிரூபித்து காட்டு என்று தொல்லை தர ஆரம்பித்துள்ளார்.
இதனிடையே சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணி என்பதால், அவருக்கு வளைகாப்பு விழா நடத்துவது குறித்துப் பேசுவதற்காக அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அபிலாஷின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு சுப காரியம் குறித்து பேசி முடிவெடுக்க வந்தவர்களிடம், கணவன் அபிலாஷ் தன்னுடைய சந்தேகத்தை போட்டுடைத்தார்..
டிஎன்ஏ டெஸ்ட்
குழந்தை என்னுடைய குழந்தைதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும், அதற்கு சுஷ்மிதா உடனடியாக டிஎன்ஏ டெஸ்ட் செய்ய வேண்டும் என்றும் குடும்பத்தினர் அத்தனை பேர் முன்னிலையிலும் வற்புறுத்தி சண்டை போட்டுள்ளார். இதை சுஷ்மிதா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சி அடைந்தார்.. காரணம், கணவர் வீட்டில் தன்னை பற்றி சந்தேகப்படுவதை, தன் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார் சுஷ்மிதா.. வளைகாப்பு பற்றி பேச வந்தவர்களிடம் அபிலாஷ் இதை சொன்னதுமே, அதிர்ச்சியிலும், அவமானத்திலும் சுஷ்மிதா கூனிக்குறுகி போனார்..
அதற்கு பிறகும்கூட மாமியார் குடும்பத்தினர் கொடுத்து வந்த துன்புறுத்தல்களையும் சுஷ்மிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் மீதும், பிறக்காத தன் குழந்தையின் மீதும் விழுந்த இந்த பழியைத் தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாமியார், கணவர் கைது
மகளின் தற்கொலை அறிந்து கதறி அழுத, சுஷ்மிதாவின் அம்மா ஜனாபாய், மேடக் மாவட்ட போலீஸில் புகார் தந்தார்.. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுஷ்மிதாவின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகளை அவரது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஜனாபாய் போலீசில் குற்றஞ்சாட்டினார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுஷ்மிதாவுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட குடும்ப வன்முறையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பது உறுதியாகி உள்ளது..
இதனைத் தொடர்ந்து, தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக போலீசார் உடனடியாகச் செயல்பட்டு, சுஷ்மிதாவின் கணவன் அபிலாஷ் மற்றும் அவரது அம்மாவை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்...
மற்றவர்களை விடுங்க, கணவனே சந்தேகப்பட்டு டிஎன்ஏ சோதனை கேட்டதால் ஒரு பெண்ணும், பிறக்காத ஒரு சிசுவும் உயிரிழந்த இந்த கொடுமையை என்ன சொல்வது??? தெலங்கானா முழுவதும் இதனால் அதிர்ந்து போய் கிடக்கிறது...!!!












Click it and Unblock the Notifications