ஸ்கெட்ச் காங்கிரசுக்கு இல்லை, கேசிஆருக்கு தான்.. துடைத்தெறியப்படும் பிஆர்எஸ்? இப்படி ஆகிடுச்சே
ஹைதராபாத்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். ஆனால், தெலுங்கானாவில் இதில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ரெடியாகி வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே பாஜகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். இதனால் நாடு முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு அதன் நிர்வாகிகளைத் தக்க வைத்துக் கொள்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது.
ஸ்கெட்ச் யாருக்கு: ஆனால், தெலுங்கானாவில் இந்த லோக்சபா தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சியை விட பிஆர்எஸ் கட்சிக்கே பெரும் சவாலாக இருக்கும். அங்கே காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள பிஆர்எஸ் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை கூட பிஆர்எஸ் சிட்டிங் எம்பி பிபி பாட்டீல் பாஜகவில் இணைந்தார்,
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு சிட்டிங் பிஆர்எஸ் எம்பிக்கள் இப்போது பாஜகவில் இணைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தான் மற்றொரு பிஆர்எஸ் எம்பியான பொதுகாந்தி ராமுலு, பாஜகவில் இணைந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளாகத் தெலுங்கானாவில் மிகவும் வலுவாக இருந்த பிஆர்எஸ் கட்சிக்கு மிக பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா அரசியல்: கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபைத் தேர்தல் நடக்கும் முன்பே பலருக்கும் பிஆர்எஸ் வெல்ல வாய்ப்பு இல்லை எனத் தெரிந்துவிட்டது. அப்போது தேர்தலுக்கு முன்பே பல பிஆர்எஸ் தலைவர்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக அல்லது காங்கிரஸில் இணைந்தனர். தேர்தலில் எதிர்பார்த்தபடியே பிஆர்எஸ் ஆட்சியை இழந்த நிலையில், அங்கிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணையும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
பாஜகவில் ஐக்கியமான எம்.பி பாட்டீல் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதாகப் பாராட்டினார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக தெலுங்கானா மாநில பொறுப்பாளர் தருண் சுக் மற்றும் அதன் ஓபிசி மோர்ச்சா தலைவர் கே.லக்ஷ்மண் ஆகியோர் முன்னிலையில் பட்டீல் பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே பல பிஆர்எஸ் நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியமாகி வருகிறார்கள்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், "மோடியிடம் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை உள்ளது, அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் நாடு இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது. அவர் உலகின் மிகவும் நம்பகமான தலைவராக இன்று மாறி இருக்கிறார்" என்று கூறியிருந்தார். மேலும், ராமர் கோவில், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தல், முத்தலாக் தடை செய்தல், இலவச கொரோனா தடுப்பூசி மோடி அரசை அவர் வெகுவாக பாராட்டினார்.
என்ன காரணம்: இப்படி தெலுங்கானாவில் இந்த லோக்சபா தேர்தல் காலம் பிஆர்எஸ் கட்சிக்குச் சோதனை காலமாக மாறியிருக்கிறது. பிஆர்எஸ் நிறுவனர் கேசிஆர் தற்போது உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். அவரது மகன் தான் முக்கிய முடிவுகளையும் எடுப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர அவரது மகள் கவிதாவும் கட்சி நடவடிக்கைகளில் தலையிடுகிறார். இதனால் பிஆர்எஸ் நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள் பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணையலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications