ஹைதராபாத்தில் "மொள்ள மொள்ள" எழுந்திருக்க முயலும் காங்.. 3ல் முன்னிலை.. !
ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாட்டை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் வெறும் 3 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் 2 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது.
தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சியான டிஆர்எஸ் 62 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாஜக 22 இடங்களிலும் ஏஐஎம்ஐஎம் 31இடங்களிலும் முன்னணி வகிக்கிறது

150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 1-ல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(டிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஆனால் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சியான டிஆர்எஸ் 62 இடங்களை பெற்றுள்ளது. ஏஐஎம்ஐஎம் 31இடங்களில் முன்னணி வகிக்கிறது. பாஜக 22 இடங்களில் உள்ளது. முதலில் பாஜக முன்னிலை பெற்றதால், அமித்ஷாவின் வியூகத்திற்கு நல்ல பலன் கிடைத்துளளது என கூறப்பட்டது. ஆனால் பாஜக அப்படியே சறுக்கியது. டிஆர்எஸ் அதனை முந்தி சென்றது.
இந்த தேர்தலில் காங்கிரசின் நிலைமைதான் ரொம்ப பாவமாக உள்ளது. வெறும் 3 இடங்களையே அந்த கட்சி முன்னணியில் உள்ளது. ஏ எஸ் ராவ் நகர் வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்கி ரெட்டி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இருந்தபோதிலும் கடந்த தேர்தலுக்கு இது பரவாயில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. கடந்த முறை நடந்த மாநகராட்சி தேர்தலில் அந்த கட்சி வெறும் 2 இடமே பெற்றது. சட்டபேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சறுக்கி வரும் காங்கிரஸ், மாநகராட்சி தேர்தலில் கூட அதிக இடங்களை பெற முடியாமல் பரிதாபமாக காட்சியளித்து வருகிறது.
பீகாரை போல ஓவைசி கட்சியால் ஆதாயம் அடைய நினைத்த பாஜகவின் 'ஹைதராபாத் கனவு' டமால்!
அக்கட்சியின் உள்கட்சி பூசலே சந்திக்கும் தேர்தல்களின் எல்லாம் தோல்வியை தழுவி வருவதற்கு காரணம் என தெரிகிறது. கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒற்றுமையும் இல்லை, கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நம்பிக்கையும் இல்லை.
ஒருவரை ஒருவர் குற்றம்சாடுவதிலே அவர்கள் குறியாக உள்ளனர். அதிக காலம் நாட்டை ஆட்சி செய்த காங்கிரசை சோனியா காந்தி கண்டுகொள்ளாமல் இருந்தால் அக்கட்சி இருந்த சுவடே இல்லாமல் போய் விடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.