மகளுக்கு அமலாக்கத்துறை குறி! பாஜக தலைவரையே தூக்கிய போலீஸ்! தெலங்கானா CM கேசிஆர் அதிரடி! ப்ளாஷ்பேக்
ஹைதராபாத்: மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை சுத்துப்போட்ட நிலையில் மாநில பாஜக தலைவரை தெலங்கானா போலீசார் அதிரடியாக கைது செய்தது சமீபத்தில் பரபரப்பை கிளப்பியது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் மத்திய அரசை எதிர்க்கும் மாநில கட்சிகள் மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் மிரட்டப்படுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாஜக ஆளாத மாநிலங்களான டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தான் இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே தான் தமிழகத்தில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழில்அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் முடிவில் இன்று அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே தான் அவர் நெஞ்சுவலி எனக்கூறினார். இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜியை விரைவில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்படுவார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் இது இன்று நடந்துள்ளது. இருப்பினும் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விஷயத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே தான் ப்ளாஷ்பேக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். இவரது மகள் கவிதா எம்எல்சியாக உள்ளார். சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையே தான் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் இருப்பது தெரியவந்தது.
டெல்லி புதிய மதுபான கொள்கையில் ‛‛சவுத் குரூப்'' என்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஆம்ஆத்மி தலைவர்கள் லாபம் சம்பாதிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இந்த குழு சார்பில் ரூ.100 கோடி வரை ஆம்ஆத்மி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதோடு இந்த குழுவை கட்டுப்படுத்தும் நபர்களில் கவிதா என்ற பெயர் இருந்ததும், அவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் மகள் என்பதும் தெரியவந்தது. இதனால் தான் கவிதாவும் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற கூறப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையும் களத்தில் குதித்தது. கவிதாவிடம் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் இறுதியில் 8 மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தியது. அப்போது கவிதா கைது செய்யப்படுவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அமலாக்கத்துறையினர் அவரை விடுவித்தனர். இருப்பினும் கவிதா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் உள்ளன. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை ஏற்கனவே கைது செய்துள்ளது.
இது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தெலங்கானாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வந்தது. அப்போது தொடர்ச்சியாக தேர்வு வினாத் தாள்கள் கசிந்து வந்தன. முதலில் தெலங்கு மொழி தேர்வு வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே வினாத்தாளை கூட பாதுகாக்க முடியாத தெலங்கானா கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்திலும், பேரணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்பு இந்தி தேர்வு வினாத்தாளும் கசிந்தது. இது வாட்ஸ்அப்பில் பரவியது. சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பாஜகவை சேர்ந்த பிரசாந்த் என்பவர் வினாத்தாளை கசியவிட்டது தெரியவந்தது. மேலும், அந்த வினாத்தாளை தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்குமாருக்கும் அவர் அனுப்பியதோடு, அவரிடம் பேசியதும் தெரியவந்தது.
இதையடுத்து வினாத்தாள் கசியவிடப்பட்ட வழக்கில் தெலங்கானா பாஜக தலைவரும், எம்பியுமான பண்டி சஞ்சய் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். முதலில், தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் தொடர்ந்து முரண்டு பிடித்ததால் போலீஸார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கை என்பது முதல்வர் சந்திரசேகர ராவின் உத்தரவு மூலம் போலீசார் எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ம் தேதி செல்ல இருந்த நிலையில் தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்குமார் ஏப்ரல் 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இதன்மூலம் சந்திரசேகர ராவ் நேரடியாக மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவால் விடுத்துள்ளதாக தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.s












Click it and Unblock the Notifications